ஆசிரியர் தகுதித்தேர்வு ஊழல் பேர்வழிகளைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை..? சீமான் வேண்டுகோள்

ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.


 மேலும், ஊழல்பேர்வழிகளாகச் செயல்பட்டப் பெரும் புள்ளிகளைத் தப்பிக்க வைக்க முயலும் தமிழக அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வில் முறைகேடுகளும், நிர்வாகச்சீர்கேடுகளும் நிகழ்ந்திருப்பது நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வுகளிலும்

அதேபோன்ற செயல்முறைகள் மூலம் மிகப்பெரும் ஊழல்கள் அரங்கேற்றப்பட்டது அம்பலமானப்பிறகும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்யவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தரவோ எவ்வித முன்நகர்வையும் எடுக்கவில்லை.

கடந்த 2012ஆம் ஆண்டு, ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர் பணிக்கான நியமனங்கள் நடைபெறுவதாக அறிவித்தது தமிழக அரசு. அவற்றில் முதல்தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் மொத்தம் 7 இலட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வெழுதினர். அவர்களில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்ததையடுத்து தளர்வுகோரி கோரிக்கை எழவே, மீண்டும் தேர்வை நடத்தியது அரசு.

அத்தேர்வை 19 ஆயிரத்து 261 பேர் எழுதினர். ஆனால், அத்தேர்வு முடிவுகளை இன்றுவரை வெளியிட மறுத்து வருகிறது ஆசிரியர் தேர்வு வாரியம். ஆனால், இதற்கு முன்பு நடந்த முதல்தேர்வின் தேர்ச்சி பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெரும் முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டிருப்பது அம்பலமாகியும், அவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுப் பெரும் அநீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சியடைந்த 70 ஆயிரம் பேருக்கும் இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் முறைகேடுகள் செய்து தேர்ச்சியடைந்தவர்களுக்குப் பணிநியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு தேர்வானவர்கள் மீதும், முறைகேடுக்கு வழிவகுத்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையுமில்லை.

இதேபோல, 2019ஆம் வரை நடைபெற்ற நான்கு தேர்வுகளிலும் ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெற்றுள்ளதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் எவற்றிலும் வெளிப்படைத்தன்மையோ, நேர்மையான செயலாக்க முறையோ துளியுமில்லை. 

ஆகவே, நீதியை நிலைநாட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு வழக்குகளை மத்திய புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், ஏற்கனவே முறையாக எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமனம் வழங்கவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.