எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் நுழைந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ்! அச்சத்தில் மாணவர்கள்

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான எஸ்.ஆர்.எம் கல்லூரியில் அடுத்தடுத்த நாட்களில் ஒரு மாணவரும், ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியுள்ளது.


கடந்த மே 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை, காலை 8.40 மணிக்கு) அன்று 21 வயதான அனுப்ரியா எனும் பயோமெடிக்கல் துறை மாணவி விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  தேர்வுகள் முடிந்தும் அனுப்ரியா விடுதியை விட்டு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் அனுப்ரியாவின் அறையில் தற்கொலை குறித்து கடிதம் கிடைத்துள்ளது.

அதில், வீட்டில் சுதந்திரம் இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும், மேலும் தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும் எழுதியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக செய்திகளில் வெளியாகி உள்ளது.அனுப்ரியா தற்கொலைக்கு பிறகு அடுத்த நாள் திங்கட்கிழமை அன்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான அனீஸ் சௌத்திரி எனும் முதலாம் ஆண்டு மாணவர் விடுதியின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ராக்கிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டவர்.

 ஆனால், இறந்த மாணவர் படிப்பில் பின்தங்கி இருந்ததாகவும், பொறியியல் படிப்பு அவருக்கு கடுமையானதாக இருந்த காரணத்தினால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என கல்லூரியின் பிஆர் கூறியதாக செய்தியில் வெளியாகி உள்ளது.

இரு தற்கொலை சம்பவம் தொடர்பாகவும் மறைமலை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஒரு மாணவரும், ஒரு மாணவியுமே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 

இது தொடர்பான புகார்கள் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதேநேரம்  காவல் துறை விசாரணை சரியாக இருக்குமா என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது. அதனால், இப்போது சி.பி.சி.ஐ.டி. இந்த விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இன்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விரைவில் உண்மைகள் வெளிவரும் என்றே நம்புவோம்.