சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழி வாங்கும் முதல்வர்..? இஸ்லாம் அமைப்பு கடும் கண்டனம்.

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக போராடியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் உத்தரப்பிரதேச காவல்துறையின் நடவடிக்கை, ஒரு தீய பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி, இதனை உ.பி. முதல்வர் கைவிட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. ஸலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.


சி. ஏ. ஏ. எதிர்ப்புப் போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறை என்ற பெயரால் பொதுமக்களின் சொத்துக்களை உத்தர பிரதேச காவல்துறை பறிமுதல் செய்ய தொடங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிரானதாகும். மாநிலத்தில் மாற்று அரசியல் கருத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் பழிவாங்கலின் ஓர் அங்கமாகும்.

இது போன்ற ஜனநாயக விரோத மற்றும் வன்முறை நடவடிக்கைகள் மூலம் மாநிலத்தில் கடைசி எதிர்ப்பையும் நீக்குவதற்கு யோகியின் காவல்துறை முயற்சிக்கிறது. தொடக்கத்திலிருந்தே யோகி அரசாங்கமும் காவல் துறையும் சி.ஏ. ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற்ற மக்களை, சர்வாதிகார அரசுகளின் குண நலன்களான அதீத வன்முறை மற்றும் பழிவாங்களுடன் எதிர்கொண்டனர்.

அப்பாவி மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிராக, வலதுசாரி இந்து குழுக்களுடன் உத்தரப்பிரதேச அரசு கைகோர்த்து சட்டவிரோத கொலைகள், சித்திரவதை மற்றும் பரந்துபட்ட வன்முறையை மேற்கொண்டதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகளை பாதுகாக்க வேண்டிய காவல்துறை வெறும் குண்டர்கள் போல் நடந்து கொள்கின்றனர்.

இருந்தபோதும் எந்த அதிகாரி அல்லது வலதுசாரி குண்டர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யோகியின் கீழ் சீர்குலைந்துள்ள கிரிமினல் சட்ட முறைக்கு எதிராக குரல் எழுப்புமாறு நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.