உங்கள் வீட்டு ஜன்னல் எந்தப் பக்கம்..? இதோ அதற்கான பலன்கள்

ஒரு வீட்டின் வடக்கு திசையில் உச்ச பாகத்தில் வைக்கப்படும் ஜன்னலையே வடக்கு ஜன்னல் என்று குறிப்பிடுகிறோம்


வடக்குப் பக்கம் குறைந்தபட்சம் இரண்டு அடிகள் காலியிடம் விடப்பட்டு காம்பவுண்டும் கட்டப்பட்டு இருந்தால் அது போன்ற வீடுகளில் உள்ள வடக்கு ஜன்னல் பூரண சிறப்பைத் தருகிறது.

வடக்கு திசையின் அதிபதியாக குபேரனைக் குறிப்பிடுகிறோம். குபேரன் என்பது ஒரு குறியீடு. குபேரனுக்கு அதிதேவதை சோமன். குபேர கடாட்சம் விரும்புகிறவர்கள் வடக்கு ஜன்னலையும் அதன் வழியாக வரும் காற்றையும் விரும்புகிறவர்களாக இருப்பார்கள்.

குபேரனிடம் மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், சக்கபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் இருக்கின்றன. இவைகளில் சங்கமும் பத்மமும் தான் முதல் நிலை தகுதியைப் பெறும் நிதிகள். இவைகளுக்கு உருவம் உண்டு.

குட்டையான பூத வடிவில் தாமரை மலர் மீது அமர்ந்து சங்கை வலது கரத்தில் பிடித்திருப்பவர் சங்கநிதி. தாமரையை பிடித்திருப்பவர் பத்மநிதி. கோவில் நுழைவாயில்களில் இடப்புறம் பத்மநிதியையும், வலப்புறத்தில் சங்க நிதியையும் காணலாம். தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில் கோபுரங்களில் ஈசான முலையிலிருந்து வாயு மூலைக்குள் வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் இடம் பெறுவது வழக்கம். நமது வீடுகளில் கூட இந்த குபேரனை தரிசனம் செய்வதற்காக நமது பணப்பெட்டிகள் நைருதி மூலையில் வடக்கை பார்த்தவாறு வைக்கப்படுகின்றன.

ஒரு வீட்டின் வாயில்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். திசைகள் நிலையானவை என்பதால் ஒரு வீட்டின் வடக்குப்பக்கம் சூரிய வெளிச்சம் நிலத்தில் படுமாறு திறந்த வெளியாக இருப்பது மிக மிக அவசியம். வடக்கு சுவரில் ஒரு ஜன்னல் இருப்பது அவசியம். அதை பகலில் திறந்து வைத்தது அதை விட அவசியம். இது குடும்பத் தலைவரின் வருமானத்தைச் சீராக வைத்திருக்கும் என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.