வீட்டின் மாடியில் சடலமாக கிடந்த மகன் குடும்பம்! எதுவும் தெரியாமல் கீழ் வீட்டில் வசித்து வந்த தந்தை! உண்மை தெரிந்து அதிர்ந்த போலீஸ்!

வியாபாரி ஒருவர் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியை சேர்ந்த சேதன் துளசியன் என்ற வியாபாரி ஒருவர் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். அதே வீட்டின் கீழ் தளத்தில் அவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர். 46 வயதான அந்த வியாபாரி சேதன் துளசியன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு போன் செய்து தன் வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்து விட்டேன் எனவும் தற்போது நானும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் எனவும் கூறி போனை துண்டித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கீழ் தளத்தில் வசித்து வந்த சேதன் துளசியனின் தந்தை போலீஸ் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு அவரிடம் சேதன் எங்கு தங்கியிருக்கிறார் என்று விசாரித்து அவரது அறைக்கு சென்றபோது கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் போலீசார் வேறுவழியின்றி கதவை உடைத்து உள்ளே சென்றபோது சேதன் சடலமாக தூக்கில் தொங்கி இருந்த நிலையில் இருந்தார்.  

அவருக்கு அருகே அவரது மனைவி மற்றும் மகள் மகன் இறந்த நிலையில் சடலமாக இருந்தனர். இதனையடுத்து போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.