பாலத்தில் மோதி கவிழ்ந்த பேருந்து! டிரைவர் கண் அயர்ந்தால் 29 பேர் பலியான கோரம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா அதிவிரைவு சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோ. ஆக்ராவையும் நொய்டாவையும் இணைக்கும் 165 கிலோமீட்டர் நீளமுள்ள யமுனா அதிவிரைவு சாலை சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. டெல்லி மற்றும் இதர உத்திரப்பிரதேச பெருநகரங்களை மிக எளிதில் சென்றடைவதற்காக இந்த சாலையானது கட்டப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் லக்னோவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு தனியார் பேருந்தின் மூலமாக டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி 15 அடி ஆழமான கால்வாயில் உருண்டது. 

இந்த கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். விபத்து நேர்ந்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர். பேருந்துக்குள் படுகாயமடைந்த 20 பேரை மீட்புக்குழுவினர் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிழைத்த பயணிகளிடம் விசாரித்தபோது, "ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் தான் விபத்து நேர்ந்தது" என்று கூறினர். இந்த கோர விபத்திற்கு ஆழ்ந்த இரங்கல் கூறியுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.