தினமும் நடைபெறும் ராதை கிருஷ்ணரின் ராச லீலைகள்! ஏன் தெரியுமா?

உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது.

இதை இந்தியாவில் விருந்தாவன் என அழைக்கின்றனர். இந்த இடம் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி, பாடி, விளையாடிய இடமாக குறிப்பிடப்படுகிறது. பிருந்தாவனத்தில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஸ்ரீகிருஷ்ணர், ராதை கோயில்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இங்குள்ள நிதிவனம் என்கிற காட்டுக்குள் அமைந்துள்ள ரங் மஹால் எனும் கோவில்.

இந்த நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பூமி. இந்த வனத்தில் நீரைப் பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாகக் காணப்படுவது ஆச்சரியமான விஷயமாகும். இந்தக் காட்டில் இருக்கும் எந்த மரங்களும் நேராக வளராமல் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வளைந்து காணப்படுகிறது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயம். இந்தக் காட்டைச் சுற்றி துளசிச் செடிகள் மிகுந்து காணப்படுகின்றன.

அவை அனைத்தும் ஜோடியாகவே வளர்ந்து வருவது மற்றுமொரு அதிசயம் ஆகும். இந்தத் துளசிச் செடிகள் அனைத்தும் ஸ்ரீகிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என நம்பப்படுகிறது. இந்தக் கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் ஒன்று உள்ளது. அதன் அருகில் ஒரு கலசத்தில் நீரும், ஸ்ரீகிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும், தரித்துக்கொள்ள வெற்றிலை பாக்கும், சேலை, வளையல்கள், தாமரை இலை ஆகியவையும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது.

இரவு ஏழு மணி பூஜைக்குப் பிறகு அர்ச்சகர்கள், பக்தர்கள் என அனைவரும் இந்தக் காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர். பகலில் இந்தக் காட்டுப் பகுதியில் சுற்றித் திரியும் விலங்குகளும், பறவைகளும் கூட இரவில் இப்பகுதியை விட்டு வெளியேறுவது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

ஒவ்வொரு நாளும் காலையில் இந்தக் கோவிலை திறக்கும்பொழுது தண்ணீரும், உணவுகளும் உண்ணபட்டிருப்பது இன்றுவரை அதிசய நிகழ்வாகும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரும் ராதையும் இந்தக் கோவிலுக்கு வருவதாகவும், அப்பொழுது இந்தக் கோவிலைச் சுற்றி வளர்ந்து இருக்கும் துளசிச் செடிகள் கோபியர்களாகவும் மாறி ஸ்ரீகிருஷ்ணருடன் ஆடிப் பாடுவதாக நம்பப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் ராசலீலைகளைப் பார்க்க இந்தக் காட்டுக்குள் இரவு நேரங்களில் யாரையும் அனுமதிப்பதில்லை.