திருமணம் முடிந்து கணவனுடன் சென்ற மணப்பெண்! வழிமறித்து கடத்திச் சென்ற காதலன்!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் முடிந்து மணமகன் குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருந்த மணப்பெண்ணை கடத்திச் சென்ற முன்னாள் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.


உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் வினிதா சுதர், இவருக்கு கடந்த திங்கட்கிழமை திருமணம் நடைபெற்றது திருமணம் முடிந்து மணப்பெண் வினிதா புதுக் கணவனுடனும், கணவன் குடும்பத்தாருடனும் காரில் கணவன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். 

இந்நிலையில் ரயில்வே லெவல் கிராசிங் ஒன்றின் அருகில் வினிதாவின் முன்னாள் காதலன் பிரயாக் ஜீங்கர் மற்றும் சிலர் அவர்களை வழிமறித்தனர். அவர்கள் மணமகனைத் தாக்கி காரையும் சேதப்படுத்தியதோடு மற்றவர்களை மிரட்டி விட்டு வினிதாவை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர். 

திரைப்பட பாணியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து மணமகன் வீட்டார் அளித்த புகாரின் பேரில் போலீசார் மணப்பெண்ணையும், முன்னாள் காதலனையும் தேடி வருகின்றனர். வினிதா வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டாரா அல்லது மனம் இசைந்தே உடன் சென்றாரா என்பது அவர்களைப் பிடித்த பிறகுதான் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.