காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


டெல்லியில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வந்தது. இறுதியில் சோனியா காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை காங்கிரஸ் தலைவர் தேர்வுக் கூட்டத்தில் பங்கேற்ற குலாம் நபி ஆசாத் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்தது.

இதனால் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டு காங்கிரஸ் மேலிடத்தை அதிர வைத்தார். இதன் பிறகு ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவராக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது.

இதனால் முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் காந்தி குடும்பத்தில் சேராத ஒருவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்க மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. இதனால் மீண்டும் சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க உள்ளார். 

அதே சமயம் இடைக்கால தலைவராக மட்டுமே சோனியா செயல்படுவார் என்றும் வழக்கமான தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.