கொரோனாவை குணமாக்க பயன்படும் தாய்ப்பால்..! தானம் கொடுக்க தயாரான 1000 இளம் தாய்மார்கள்!

தாய்ப்பால் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதை கண்டறிவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 1000 இளம் தாய்மார்கள் தங்களுடைய தாய்ப்பாலை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.


உலகை அச்சுறுத்தும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து மனிதர்களை காப்பாற்றுவதற்காக இதுவரை பல ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு மருந்தை தயாரிக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இன்று வரை இதற்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்நிலையில் தாய்ப்பாலில் இருந்து இந்த கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் மருந்தை கண்டுபிடிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். 

இதுவரை மனித இனத்தை அழிக்க வந்த சார்ஸ், மெர்ஸ் போன்ற வைரஸ்களுக்கும் இந்த தாய்ப்பால் மூலம் மருந்து கண்டறியலாம் என ஒரு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வைரசுக்கு தாய்ப்பாலில் இருந்து மருந்து கண்டுபிடிக்க தேவையான எல்லா முயற்சிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆராய்ச்சிக்காக சுமார் 1000 இளம் தாய்மார்கள் தங்களுடைய தாய்ப்பாலை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயற்கையாகவே தாய்ப்பாலில் வைரஸ்களையும் பாக்டீரியாக்களையும் எதிர்த்துப் போராடும் சக்திகள் உள்ளன. தாய்ப்பால் நோய் தொற்றுகளையும் ஒவ்வாமையும் தடுப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. இது குழந்தைகளை வளப்படுத்தும் புரதங்கள் நிறைந்த கொலோஸ்ட்ரமையும் கொண்டுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் பொழுது தாய்ப்பால் ஒரு நல்ல தேர்வு என்பதை மறுப்பதற்கில்லை. இதனை கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் தாய்ப்பாலைப் வைத்து ஆராய்ச்சி செய்ய முயற்சிக்கின்றனர். தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடிகள் இரத்தத்திலிருந்து மட்டுமே வருவதால் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் என்று நம்பப்படுகிறது. 

ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான, ரெபேக்கா பவல், நியூயார்க் நகரத்தைச் சேர்ந்தவர். தற்போது இந்த இடம் நோய் பரவலுக்கான புதிய மையமாக மாறியுள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் இதுவரை பல குழந்தைகளை இந்த நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற பட்டுள்ளதாக இவர் நம்புகிறார். பாலூட்டும் பெண்கள் வைரஸுக்கு பதிலளிக்கும் வகையில் ஆன்டிபாடிகளை உருவாக்கியிருக்கலாம், இதை அவர்கள் பால் ஊட்டும் பொழுது அந்த குழந்தைகளுக்கும் சென்றடைகிறது. தாய்மார்களின் தாய்ப்பாலை ஆராய்ச்சி செய்வதன் மூலம் அதில் இருக்கும் ஆன்டிபாடிகளை கண்டறிந்து அதன்மூலம் இந்தக் கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் மருந்தையும் கண்டறியலாம் என கூறியிருக்கிறார்.