ரஜினியுடன் கூட்டணி! பா.ஜ.க தேர்தல் ஸ்பெசலிஸ்ட் ராம் மாதவ் அதிரடி!

பாஜக கூட்டணி


தமிழகத்தில் ரஜினியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

   ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் ராம் மாதவ். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இவருக்கு கொடுக்கப்பட்ட பணிகள் என்னவென்றால், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். அந்த வகையில் வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், தமிழ்நாடு, ஒடிசா, கேரளா ஆகியமாநிலங்களின் அரசியல் நிலவரங்களில் பா.ஜ.க பிரதிநிதியாக ராம்மாதவ் செயல்பட்டு வருகிறார்.

   இவர் பா.ஜ.கவில் இணைந்த பிறகு தான் காஷ்மீரில் பா.ஜ.க கூட்டணி அரசு ஏற்பட்டது. இதே போல் வடகிழக்கு மாநிலங்களில் அசாம், அருணாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி அரசும், சில இடங்களில் பா.ஜ.கவும் தனித்தே ஆட்சியில் உள்ளனர். இந்த அளவிற்கு தனது அரசியல் நுட்ப செயல்பாடுகளால் பா.ஜ.கவை ஒரு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்க வைக்கும் அளவிற்கு செல்வாக்குள்ளவராக திகழ்கிறார்.

   இந்த நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் மீது ராம் மாதவின் கவனம் திரும்பியுள்ளது. சென்னைக்கு நேற்று முன்தினம் வருகை தந்த ராம் மாதவ் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களையும் ராம் மாதவ் சந்தித்தார். அப்போது  ராம் மாதவ் பேசியதாவது: 2019 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது.

   தி.மு.க – காங்கிரசுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியுள்ளது. மேலும் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த தி.மு.கவின் முடிவை காங்கிரஸ் கட்சியினர் கூட தற்போது வரை வரவேற்கவில்லை. இந்த விவகாரத்தில் ராகுலை யாரும் பிரதமர் வேட்பாளராக இனி அங்கீகரிகப்போவதில்லை. எனவே 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒரே பிரதமர் வேட்பாளர் தான். அவர் தான் மோடி.

   தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை பா.ஜ.க முடுக்கிவிட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை ரஜினி மற்றும் அ.தி.மு.கவுடன் நடைபெறுகிறதா என்று கேட்டனர். இல்லை என்று இந்த கேள்விக்கு பதில் அளிக்காத ராம் மாதவ், தமிழகத்தை பொறுத்தவரை பலமான கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. யாருடன் என்பது குறித்து தற்போதைக்கு சொல்ல முடியாது என்று ராம் மாதவ் கூறினார்.

   அதாவத ரஜினியுடன் பேச்சு நடைபெறுகிறது என்பதை வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக பேச்சு நடைபெறுகிறது என்பதையே ராம் மாதவ் பவரது பதில் மூலம் தெரிவித்துள்ளது தெரியவருகிறது. இதே போல் அ.தி.மு.கவுடனும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதையும் ராம் மாதவ் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

   தேசிய அரசியலை பொறுத்தவரை பா.ஜ.கவின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்க கூடியவர் ராம் மாதவ். அவர் சென்னை வந்து கூட்டணி குறித்து பேசியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசையும் கூட சில நாட்களாக நாங்கள் வலுவான கூட்டணி அமைக்கப்போகிறோம் என்று பேசி வருகிறார். அதுவும் ரஜினியை மனதில் வைத்து தான் என்று சொல்லப்படுகிறது.