மத்தியபிரதேசத்தில் காங்., அரசுக்கு ஆபத்து!ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க வியூகம்!

கர்நாடகாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த மாதம் நடந்து முடிந்த மத்திய பிரதேச தேர்தலில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் சுயேட்சை மற்றும் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் மெஜாரிட்டிக்கு 116 எம்.எல்.ஏக்கள் தேவை. பெரும்பான்மைக்கு இரண்டே இரண்டு எம்.எல்.ஏக்கள் குறையும் நிலையில் சுயேட்சை மற்றும் பகுஜன் சமாஜ் ஆதரவால் கமல் நாத் அங்கு முதலமைச்சர் ஆனார்.

   இந்த நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறும் திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரும் கமல்நாத் மீது அதிருப்தியில் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.கவிற்கு 109 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு ஏழு எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவை.

  எனவே சுயேட்சை மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஒருவரை வளைத்து ஆட்சி அமைக்க பா.ஜ.க வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது தான் கூடுதல் இடங்களை வெல்ல உதவும் என்று பா.ஜ.க திட்டம் போடுவதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்து தான் மேலிடம் உத்தரவு கொடுத்தால் மத்திய பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று அம்மாநில பா.ஜ.க தலைவர் ஒருவர் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார்.

   கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த செய்தியில் அனைவரது கவனமும் இருக்கும் நிலையில் மத்திய பிரதேசத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான செயல்களில் பா.ஜ.க இறங்கியுள்ளது. இது குறித்த தகவல் காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கமல்நாத் முதலமைச்சரானதை அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.