பிரஹல்லாதர் பிறந்த கதை – சங்கு கர்ண தேவதையின் பூலோக அவதாரம்!

சதுர்முகப் பிரம்மதேவனின் அவையிலே அங்கம் வகித்த தேவதைகளுள் சங்கு கர்ண தேவதையும் ஒருவர்.


நான்முகன் ஸ்ரீமன் நாராயண பூஜைக்கு ஒவ்வொரு தேவதையும் ஒவ்வொரு கைங்கர்யதிற்கு என நியமிக்கப்பட்டிருந்தனர். அவ்வகையில் சங்கு கர்ண தேவதைக்கான பணி ஸ்ரீ ஹரியை அர்ச்சிக்க, ஸ்ரீஹரியை அலங்கரிக்க நாள்தோறும் வாசமுள்ள பலவிதமான புஷ்பங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதே.

அதன் பொருட்டு சங்கு கர்ண தேவதை மேலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வருவது வழக்கம். அப்படி வருகையில் புண்ணிய பூமியான பாரத தேசத்தில் பல இடங்கள் அவருக்கு அத்துப்படியாக இருந்தன. அவற்றில் மலைகளும் அதன் இடையே ஓடும் நதியும் வானமும் என சங்கு கர்ணரை வெகுவாக கவர்ந்த வனப்பான இடம் ஒன்று இருந்தது. சங்கு கர்ணர் பூக்களைப் பறிக்க வரும்போது வந்த வேலை முடிந்த பின் சில சமயம் இதைப் போன்ற இடங்களைப் பார்த்து விட்டால் தன்னை மறந்து அதிலேயே லயித்து விடுவார்.

அப்படி அவர் லயித்த இடங்களில் ஒன்றுதான் இந்த நவ பிருந்தாவன். இப்படி நேரம் காலம் போவது தெரியாமல் லயித்தலால் பூஜைக்கு பூக்களை தினமும் தாமதமாக கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது. இதனால் பிரம்மன் வெகுண்டெழுந்தார். ”ஸ்ரீமன் நாராயணனின் பூஜையை விட உனக்கு பூலோகத்தில் இடங்கள் பெரிதாகி விட்டனவா” என கோபித்து எங்கு உன் மனம் லயித்ததோ,

அந்த பூலோகத்திலேயே நீ பிறவியெடுக்கக் கடவாய் என்று சாபம் கொடுத்தார். அதுவும் அரசர் கூட்டத்தில் பிறக்கக் கடவாய் என்று பிரம்மதேவன் மேலும் சாபம் இட்டதும் ஸ்ரீமன் நாராயணா எல்லாம் உன் விளையாடல் என்று எண்ணியவாறு ஸ்ரீஹரியை பிரார்த்தித்தார் சங்கு கர்ணர்.

சங்கு கர்ணன் ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தித்துக் கொண்டு பிரம்ம தேவனிடம் தங்கள் கட்டளையை ஏற்கிறேன். ஸ்ரீமந் நாராயணரின் பூஜைக்கு புஷ்பங்களுடன் உடனே வராமல் பூலோகத்தில் நான் நேரம் எடுத்துக் கொண்டது தவறு தான். இத்தனை காலம் என்னையும் நாராயண பூஜையில் ஒரு அங்கம் வகிக்கச் செய்ததற்கு நன்றி என்றார். உடனே பிரம்மன் , “சங்கு கர்ணா, இதுகாறும் நீ நாராயணர் பூஜைக்குத்தான் உதவினாய். இனி பூலோகத்தில் பிறப்பெடுத்து ஸ்ரீமன் நாராயணனையே தரிசிக்கப் போகிறாய். யுகங்கள் கடந்தும் உன்னுடைய அவதாரம் தொடரும். சத்திய தர்மங்கள் உன்னால் நிலைநாட்டப்படும். நீ செய்த நாராயண சேவைக்கு உனக்கு கிடைத்த வெகுமதி தான் இந்தச் சாபம் என பிரம்மதேவன் அருளியதும் சங்கு கர்ணர் மகிழ்ச்சியுற்றார்.

சங்கு கர்ணர் பிரஹல்லாதராக அவதரிப்பதற்கு முன்பு பூலோகத்தில் ஹிரண்ய கசிபுவின் கொட்டம் சொல்லிலடங்காது இருந்தது. இந்த சமயத்தில் ஹிரண்யகசிபுவின் மனைவி லீலாவதி கர்ப்பவதியாக இருந்தார். ஹிரண்ய கசிபு தன் கோரிக்கை நிறைவேற தனக்கு யாராலும், எதனாலும் எப்போது மரணம் சம்பவிக்கலாகாது என பிரம்ம தேவனை நினைத்து கடும் தவம் புரிந்து வந்தான். இதுதான் சரியான சமயம் என்று ஸ்ரீஹரி நாரத மஹரிஷியை லீலாவதியிடம் அனுப்பினார்.

நாரதரும் லீலாவதி இடம் சென்று நீ இப்போது இருக்கும் நிலையில் நல்ல விஷயங்களை கேட்டு மனதை சாந்தமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உனக்கும் உன் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கும் நல்லது. உன் கணவன் செய்யும் பாபமெல்லாம் உன் குழந்தைக்கு வரக் கூடாது என்று எடுத்துரைத்து ஸ்ரீமந்நாராயணனின் லீலா வினோதங்களை, கல்யாண குணங்களை சொல்லிக்கொண்டே வந்தார். அதை லீலாவதி மட்டும் கேட்கவில்லை அவள் வயிற்றில் இருந்த கருவும் கேட்டுக்கொண்டது.

எந்த குழந்தை பிறந்த உடன் அதன் காதில் ஓம் ஹிண்யாய நமஹ என உபதேசிக்க வேண்டும் என்று ஹிரண்யகசிபு சுக்கிராசாரியாருக்குக் கட்டளையிட்டிருந்தானோ அந்தக் குழந்தைக்கு அது பிறக்கும் முன்பே கருவிலேயே நாரதரால் ஸ்ரீமன் நாராயண நாமம் உபதேசிக்கப்பட்டது. அப்படி உபதேசத்தைக் கேட்டு பிறந்த குழந்தைதான் பிரஹல்லாதர்.

நாரத மஹரிஷியின் உபதேசத்தைக் கேட்டுப் பிறந்த குழந்தை பிரஹல்லாதன் தந்தையையே எதிர்த்தான், நாராயண நாமத்திற்கு இணை இல்லை என வாதிட்டான். ஒரு கட்டத்தில் தனக்கும் தன் தந்தைக்கும் ஏற்பட்ட வாதத்தால் ஸ்ரீமன் நாராயணரே நரசிம்ஹ வடிவெடுத்து தந்தையை ஸ்ம்ஹாரம் செய்யும் அளவிற்குப் போனது. சங்கு கர்ணரை பிரஹல்லாதராக ஸ்ரீமன் நாராயணர் அவதரிக்க வைத்தனன் நோக்கம் இதுதான்.