நவக்கிரக நாயகர் சூரிய பகவானின் வரலாறு இது! தோஷங்களை நீக்கும் இறைவன் இவர்!

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற வாசகத்துக்குரிய தலைமை கிரகம் சூரிய பகவான்!


சூரிய பகவான் படைத்தல் தொழிலை மேற்கொண்ட போது தனக்கு உதவியாக சப்தரிஷிகளை படைத்தார். அவர்களில் ஒருவர் மரீசி. அவரது மகன் காசியபர் பல வேதங்களையும் உபநிடதங்களையும் கற்று பண்டித்துவம் பெற்று விளங்கினார். இவர் தட்சப் பிரஜாபதியின் பெண்கள் 13 பேரை மணந்து இப்பூவுலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான அனைத்து உயிர்களையும் படைத்தார். காசியபருக்கும் அதிதிக்கும் பிறந்த சூரியன் இந்த உலகினை ஒளி பெறச் செய்து பிரத்யட்ச மஹாவிஷ்ணு என்று போற்றப்படுகிறார்.

மற்ற கிரகங்களை ஆட்சி செய்யும் சக்தியும், அஸ்தமனம் பெறச் செய்யும் சக்தியும் சூரிய பகவானுகு உள்ள சிறப்பு அம்சம். சூரியன் சமுக்ஞை (உஷா தேவி) பிரபை, ரைவத இளவரசி ஆகிய மூன்று மனைவியரை மணந்தார். அவர்களில் உஷா தேவியிடம் அதிக பிரியம் கொண்டிருந்தார். அவரே பட்டத்துராணி. சூரியனுக்கும் உஷா தேவிக்கும் வைவஸ்வதமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனிடம் வெப்பத்தை குறைத்துக் கொள்ளும்படி பலமுறை உஷா தேவி சொல்லியும் சூரியன் குறைத்துக் கொள்ளவில்லை..

இதனால் உஷா தேவி தன் நிழலைக் கொண்டு சாயாதேவி என்ற பெண்ணை உருவாக்கி விட்டு வெளியேறினார். நாளடைவில் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் சாவர்ணி, சனி என்ற பிள்ளைகளும், தபதி, விஷ்டி என்ற பெண்களும் பிறந்தனர். தன் பிள்ளைகளிடம் அதிக அன்பை காட்டிய சாயாதேவி உஷா தேவியின் பிள்ளைகளிடம் மாற்றான் தாய் போல நடந்து கொண்டாள்.

ஒரு சமயம் சாயாதேவிக்கும் எமனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாயா தேவியை எமன் கீழே தள்ளி உதைத்தார். இதை சனி தட்டி கேட்க எமன் தன்னிடம் இருந்த கதாயுதத்தால் சனியின் கால்களை அடித்தார். இதைக்கண்ட சாயாதேவி எமனின் கால்கள் அழுகிப் போகட்டும் என சாபமிட்டாள். அதன்படி எமனின் கால்கள் அழுகத் தொடங்க, தன் தந்தை சூரியனை காணச் சென்றார்.

அனைத்து விஷயங்களையும் சூரியனிடம் கூறினார். சூரியன் சாயாதேவியை வெறுத்து உஷா தேவியைத் தேடிச் சென்றார். அப்போது உஷா தேவியின் நிபந்தனையை ஏற்று சூரியன் தனது வெப்பத்தை குறைத்துக் கொள்கிறார்.

சாபம் பெற்ற எமனிடம் சிவபெருமானை நோக்கித் தவமிருக்க ஆலோசனை சொன்னார் சூரியன். எமனும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் மேற்கொண்டு சிவபெருமானின் தரிசனத்தையும் ஆசியையும் பெற்று எமதர்மராகி உயிர்களுக்கு ஏற்படும் மரண காலத்தை கணக்கிட்டு கடமையாற்றினார். அதன்பின் சூரியனும் உஷா தேவியும் இணைந்தனர். அதன் பயனாக குதிரை வடிவம் கொண்ட இரட்டை குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு அஸ்வினி தேவர்கள் என்று பெயர்.

நட்சத்திர தொகுப்பில் அஸ்வினி தேவர்களே முதன்மையானவர்கள். சனிபகவானும் நவக்கிரக அந்தஸ்து பெற்று நவக்கிரகங்களில் ஒருவரானார். சூரியனுடைய அனைத்து புத்திரர்களும் உயர்ந்த நிலையை அடைந்தார்கள். எனவே ஒருவர் ஜாதகத்தில் சூரியன் அமையும் நிலையைப் பொறுத்தே களத்திர தோஷம், புத்திர தோஷம், உத்தியோக பிரபந்த தோஷம், வித்யா பிரபந்த தோஷம் போன்றவைகள் ஏற்படுகின்றன.