காதை கிழிக்கும் சப்தம்! குபுகுபு சைலன்சர் புகை! சென்னையை மிரட்டிய பைக் ரேஸ்! உயிருக்கு போராடும் 2 பேர்!

போலீசாரின் தடையை மீறி சென்னையில் பைக் ரேஸ் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மற்றும் ஈசிஆர் பகுதிகளில் பைக் ரேசில் ஈடுபடுவதை இளைஞர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் பொதுமக்கள் பல்வேறு அவதிக்குள்ளாகினர். மேலும் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்பட இந்த பைக் ரேஸ்கள் காரணமாக அமைந்தன.

இதனால் சென்னையில் பைக் ரேஸ் நடத்த போலீஸார் தடை விதித்திருந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக பைக் ரேஸ் நடத்துவது மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் விதிக்கப்பட்ட தடையை மீறி சென்னை மெரினா சாலையில் இளைஞர்கள் இன்று அதிகாலை பைக் ரேஸ் நடத்தியுள்ளனர். 

இன்று அதிகாலை சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். ஜெமினி பாலம் முதல் ஆர் கே சாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட பைக்களில் இளைஞர்கள் தாறுமாறான வேகத்துடன் பைக் ரேஸில் ஈடுபட்டனர். 

இந்த பைக் ரேசின் போது ஆர்கே சாலையை கடக்க முயன்ற இருவர் மீது வேகமாக பைக் ரேஸில் கலந்து கொண்ட ஒருவரின் பைக் ஆனது அவர்களின் மீது மோதி தூக்கி வீசி எறியப்பட்டனர். இதில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ரகுமான் என்பவரும் அவரது நண்பரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு காரணமான பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.