தினகரனுக்கு குக்கர் போச்சு... அடுத்து போறது தங்கமா?

தினகரனுக்கு இப்போது தொட்ட இடமெல்லாம் புண்ணாகி வருகிறது. செந்தில் பாலாஜி போனபிறகு நடந்த மிகப்பெரும் இழப்பாக குக்கர் சின்னம் சுட்டிக்காட்டப் படுகிறது. இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்?


குக்கர் சின்னம் நிச்சயம் கிடைத்துவிடும் என்ற தினகரன் எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டது தேர்தல் கமிஷன். அ.ம.மு.க. ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பதால், அந்தக் கட்சிக்கு குக்கர் சின்னத்தை பொதுவாக ஒதுக்க முடியாது என்று தெள்ளத்தெளிவாக உச்ச நீதிமன்றத்துக்கு விளக்கம் கொடுத்துவிட்டது.

குக்கர் சின்னத்தை தன்னுடைய ராசியாக கருதிவந்தார் தினகரன். அதனால்தான் டெல்லி வரைக்கும் போய் வழக்குப் பதிவு செய்தார். வழக்கு பதிவு செய்தவர் ஒழுங்காக கட்சியைப் பதிவு செய்திருந்தால் இப்படியொரு நிலைமை வந்திருக்காது என்று அ.ம.மு.க.வினர் புலம்புகின்றனர்.

எப்போது தேர்தல் நடந்தாலும் குக்கர்தான் சின்னம் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கில் குக்கர் வாங்கி பதுக்கிவைக்கும் வேலையையும் தினகரன் செய்திருக்கிறாராம். அவற்றை எல்லாம் என்ன செய்வது என்பதும் அவருக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.

இரட்டை இலையைவிட குக்கர் சின்னத்தை தன்னுடைய வெற்றிச் சின்னமாக கருதிவந்தார் தினகரன். அதனால்தான் அதனை எப்படியும் பெறவேண்டும் என்று போராடினார். இனியும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு போட்டு வாங்க முயற்சித்தாலும், குக்கர் என்பது அம்புட்டுத்தான் என்கிறார்கள்.

இந்த நிலையில் இதுவரை தினகரன் சொல்லிவந்ததை எல்லாம் ஆட்டு மந்தை போன்று நம்பிவந்த ஆதரவாளர்கள், குக்கர் போனதும் அலறுகிறார்கள். இனிமேல் சுயேட்சையாக தேர்தலில் நின்று ஜெயிக்கமுடியுமா என்று கதறுகிறார்கள். எப்போது அ.தி.மு.க.வில் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்கிறார்கள்.

தங்கத்தமிழ்செல்வன் தலைமையில் 10 பேர் ஒன்றாக வந்தால் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்கிறோம் என்று அமைச்சர் ஒருவர் உறுதி கொடுத்திருக்கிறாராம். ஆனால், பணம் எவ்வளவு கிடைக்கும் என்பதை சொல்லத் தயங்குவதால் ஒன்றுசேர அச்சப்படுகிறார்களாம். எப்படி என்றாலும் தேர்தல் நெருங்கும்போது தங்கம் தலைமையில் ஒரு டீம் அ.தி.மு.க.வுக்குப் போவது உறுதி என்கிறார்கள்.

தினகரன் உஷாராக இருக்கவேண்டிய நேரம் இது.