புதிய தேசியக் கல்விக் கொள்கை ஜாக்கிரதை! தமிழர்கள் உஷார் ஆக வேண்டிய தருணம் இது..!

தேசியக் கல்விக்கொள்கை -2019 -என்று உருவாக்கப்பெற்றுள்ள வரைவுத் திட்டமும் கல்வியில் அடுத்தடுத்துத் தேர்வுகளைப் பரிந்துரைக்க விரும்புகிறது, இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் இறுதி நாள் நெருங்குகிறது.


இதனை படித்து புரிந்துகொண்டு, விளக்கம் கேட்கவும், கூடுதல் தகவல் தெரிந்துகொள்ளவும் நாட்கள் போதாது. அப்படியே அமுல்படுத்தப்பட்டால், தமிழ் காணாமல் போய்விடும் என்று எச்சரிக்கை செய்கிறார் கல்வியாளர் ராமசாமி. இப்போதிருக்கும் பள்ளிக் கல்வி தமிழ்நாட்டில் 10 +2 என்பதாக இருக்கிறது. சில மாநிலங்களில் 8 +2+2 என்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கூட இப்படி இருந்ததுண்டு. நானெல்லாம் 8+3 என்ற அமைப்பில் பள்ளிக்கல்வியை முடித்தவன். இப்போது அளிக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கை பள்ளிக் கல்விக்கு 5+3+3 எனப்புதிய அமைப்பைப் பரிந்துரைக்கப்போகிறது.

இந்தக் கல்வித்திட்டம் அமைப்பு இந்தியா முழுக்க ஒன்றுபோல இருக்க வேண்டுமெனப் பரிந்துரைக்கின்றது. ஒற்றை இந்தியாவில் ஒரே பண்பாட்டைக் கல்வி மூலம் உருவாக்க முடியும் என நம்புவதின் வெளிப்பாடு இது. அத்தோடு இப்போதிருக்கும் கல்வித்திட்டமும் நடைமுறைகளும் தரப்படுத்துதலைக் கைவிட்டுவிட்டுத் தாராளவாதத்தோடு அனைவரையும் உயர்கல்விக்குரியவராக மாற்றுகிறது என்ற நம்பிக்கையும் இத்திட்ட வரைவை உருவாக்கியவர்களுக்கு இருக்கிறது. இவ்விரு நம்பிக்கைகளையும் பொய்யெனவும் தவறான நம்பிக்கைகள் எனவும் சொல்லிவிட முடியாது.

இந்தியாவை ஒரே பண்பாடுகொண்ட நாடாக ஆக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பலாம். தேவையில்லை; வேண்டாம் எனப் பதில் சொல்லலாம். ஆனால் தரமில்லாத கல்வியைப் பெற்றவர்கள் உயர் பட்டங்களைப் பெற்றுவிடலாமா? என்று கேள்வி எழுப்பினால் அதே போல் "தேவையில்லை; வேண்டாம்" என்று சொல்ல முடியாது. சொல்லமாட்டோம். அங்கிருந்துதான் தரப்படுத்துதல் வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.தரப்படுத்துதல் என்பதை இந்தியக் கல்வியாளர்கள் - திட்டமிடல் குழுக்களில் இருக்கும் கல்வியாளர்கள் - தேர்வுகள் நடத்தி வடிகட்டுதல் என்பதாகப் புரிந்து வைத்திருப்பதால் வெவ்வேறு நிலையில் தேர்வுகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

இப்போது இருக்கும் கல்வித்திட்டத்திலும் தேர்வுகள் இருக்கின்றன. ஆனால் ஏறத்தாழ எட்டாம் வகுப்புவரைத் தேர்வில் தோல்வி என யாரையும் நிறுத்துவதில்லை. இந்நிலை காரணமாகத் தேர்வுத்தாள்கள் கவனமாகத் திருத்தப்படுவதில்லை. அதனால் வகுப்பிலுள்ள மாணாக்கர்களுக்கு என்னவகையான உதவிகள், பயிற்சிகள் தேவைப்படும் என்பதும் கண்டறியப்படுவதில்லை. அனைவரும் வெற்றி; அடுத்த வகுப்புக்குப் போகலாம் என்பதால் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் நோக்கங்களும் சிதறுகின்றன என்ற வாதங்களில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்நிலையை மாற்றவேண்டும். ஆசிரியர்களின் பொறுப்புணர்வைக் கூட்டவேண்டும்; திறனை வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கேற்ற தேர்வு முறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள கல்விக் கொள்கை புதிய தேர்வுமுறைகளைப் பரிந்துரைக்காமல் புதியபுதிய பாடங்களைப் பரிந்துரைக்கிறது.புதிய பாடங்களில் மொழிப்பாடங்களும் இருக்கின்றன. அறிவுத்துறைப் பாடங்களும்உள்ளன. அறிவுப்புலப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடத் தூண்டும் தொழில் பாடங்களும் இருக்கின்றன. அவை மரபான குலக்கல்வி மாதிரிகளோடும் இருக்கும்.வரைவு அறிக்கைகளில் சொல்லப்படும் வெளிப்படையான நோக்கங்களும் விளைவுகளும் எப்போதும் ஒன்றுபோல நடப்பதில்லை. மறைக்கப்பட்ட நோக்கங்களே விளைவுகளாக ஆகிவிடுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை கல்வி மறுக்கப்பட்ட மக்கள் திரளைக் கொண்ட இந்த நாட்டில் ‘நானும் படிக்கலாம்’ என்பதை உணர்ந்து விட்ட நிலையிலேயே மறுக்கும் நிலையைத் தரப்படுத்துதலின் பேரால் திசைமாற்றம் செய்வது அவசியமா என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்.

பள்ளிக்கல்வியிலேயே பல கட்டத் தேர்வுகளை வைத்து வடிகட்டும் நோக்கம் இக்கல்வித் திட்டத்திற்கு இருக்கிறது. அடித்தள மக்களைத் திசை திருப்பும் நோக்கம் அவர்களின் பால் உண்டாகும் கரிசனத்தால் உருவாகவில்லை.. எல்லோரும் உயர்கல்விக்கு உரியவர்கள் அல்ல என்ற நிலைபாட்டிலிருந்து உருவாகியுள்ளது. - புலங்கள் சார் நுட்ப அறிவைப் பெறும் கூட்டம் எனவும் உடல்சார் உழைப்புக்குப் பதிலாக மூளையால் உழைக்கவேண்டியவர்கள் எனவும் வரையறைகளை உருவாக்கிய கோட்பாடுகள் நம்பிக்கை கொண்டவர்கள் அதனைத் திருப்பிக் கொண்டுவர நினைப்பதின் விளைவு இது. தேர்வுமுறைகளில் மாற்றங்களைப் பரிந்துரைக்காமல், வெளிப்படையாகத் தரப்படுத்துதல் நடக்காமல் அடுத்தடுத்து தேர்வுகளை எழுத வைப்பதின் மூலமும் தோல்வி எனச் சொல்வதின் மூலமும் ஒருவரை அறிவுக் குறைவானவர் என நம்பச் செய்துவிடமுடியும்.

அதன் மறுதலையாகப் பெரும்பான்மை மக்களைத் தொழில்சார் அறிவின் பக்கம் திசைதிருப்பும் நோக்கத்தை இக்கல்வித்திட்ட வரைவறிக்கை கொண்டிருக்கிறது.இதனைத் திசைதிருப்பல் என்ற கெட்ட வார்த்தையால் சொல்லாமல் வளர்ச்சிக்கான மனிதர்களை உருவாக்கும் நோக்கம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த முறை பல நாடுகளில் இருக்கும் முறைதான்.ஆனால் அங்கெல்லாம் பிறப்பின் அடிப்படையிலான சாதியின் பெயரால் - மனிதர்களைப் பிரிப்பதும், வாய்ப்புகளை மறுப்பதும் நடப்பதில்லை. இந்தியாவில் அதுமட்டுமே நடந்தது. திரும்பவும் நடக்கும். அத்தோடு அங்கு நடக்கும் தேர்வுகள் முழுமையும் எழுத்துத்தேர்வுகள் அல்ல. தேர்வுகள் மாணாக்கர்களின் திறன்களை அறியும் வாய்மொழித் தேர்வுகளாகவும் குழு விவாதங்களாகவும் இருக்கும். தேர்வுக் கூடங்களுக்கு அப்பால் மேற்கொள்ளும் திட்டப்பணிகளாகவும் இருக்கும். .

இந்தியாவில் இந்தத் தேர்வுகள் பெரும்பாலும் எழுத்துத் தேர்வுகளாக இருக்கின்றன. கல்லூரிக் கல்வியில் தான் திட்டப்பணிகள், வாய்மொழித் தேர்வு போன்றன இருக்கின்றன. அப்படியான தேர்வுகளில் இருக்கவேண்டிய நிபுணர்கள் பற்றிக் கறாரான வரையறைகள் இல்லை. இங்கே எழுத்துத் தேர்வுகளை முடித்து விட்டால் வாய்மொழித் தேர்வுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. இப்போது வந்துள்ள பாடத்திட்டம் விவாதப்புள்ளிகள் மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் முறைமைக்கு மாறாக இந்தியா முழுமைக்குமான நூல்களையும் உருவாக்கித்தரும். அதனால் மாநில அறிவும் உள்ளூர் அறிவும் பாடங்களில் இடம்பெறாமல் போகும் வாய்ப்புகளே அதிகம். கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றின் பாடங்களிலும் பொதுப் பாடத்திட்டங்களைப் பரிந்துரை செய்ய உள்ளார்கள்.

மொழிக்கல்வி, மொழிவழிக் கல்வி இரண்டையும் வேறுபடுத்திப்பார்க்கவில்லை. மொழி என்பது தகவல் தொடர்புக்கான கருவியாக - அமைப்பாக - இருக்கிறது என்பது முதல் புரிதல். அதோடு மொழிதான் ஒருவரது எல்லாவகையான அடையாளத்தையும் உருவாக்குகிறது.தமிழர்களின் இருப்பும் அடையாளமும் அவரது மொழியில் - தமிழ்நாட்டில் தமிழ் வழியாகவே - உருவாகிறது. தமிழைத் தாய்மொழி என்பதைவிடத் தமிழ் நாட்டின் புழங்குமொழி எனலாம். அதன்வழியாக உருவான அடையாளத்தையும் இருப்பையும் வெளிப்பாட்டையும் உலகத்திற்குச் சொல்ல ஒரு மொழி வேண்டும். அது ஆங்கிலமாக இருப்பதில் தமிழர்களுக்கு லாபம். மத்திய இந்தியாவில் இருப்பவர்களுக்குப் புழங்குமொழியாக இருக்கும் இந்தியே இரண்டுமாக இருக்கிறது . அதன் வழியாகத் தொடர்புகொள்ளுதலே போதும் என்பதால் அதை வைத்துக்கொள்கிறார்கள். அதனால் கற்பிக்கும் மொழியாகப் புழங்குமொழி-மாநில மொழி இருப்பதை முக்கியமாகக் கருதவில்லை. அத்தோடு இந்தியை தேசத்தின் அரசு மொழியாகவும் சம்ஸ்க்ர்தத்தை தேசத்தின் பண்பாட்டு மொழியாகவும் நினைப்பதால் அவ்விரண்டையும் அனைவரும் கற்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

இலக்கு, திட்டமிடல், விளைவுகள், பரிந்துரைகள், பற்றிக் கனவுகளை முன்வைத்துக் கவித்துவத்தோடு விரிவாகப் பேசியுள்ள புதிய கல்வித்திட்டம் நடைமுறையைப் பற்றி அதிகம் பேசவில்லை. இவற்றையெல்லாம் மைய அரசின் வசம் வைத்துக்கொண்டு நடைமுறைப் படுத்துவதை மட்டும் மாநில அரசுகளிடம் தள்ளிவிடும் வாய்ப்பிருக்கிறது. இதனை மாநில அரசுகள் புரிதுகொண்டுள்ளனவா? என்று தெரியவில்லை. அவை தான் எல்லாவற்றிற்குமான கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். ஆசிரியர்கள் வேண்டும்; பயிற்சிகள் நடத்தவேண்டும்; தேர்வுகள் நடத்தவேண்டும். 

இத்திட்டத்தை மறுதலிக்கும் -எதிர்க்கும்போது ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான கல்வித் திட்டத்தை உருவாக்கும் விதமாகச் செயல் திட்டத்தை முன்வைக்கவேண்டும். அதற்குக் கல்வி பொதுப் பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும். மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

இதையெல்லாம் சொல்வதற்கு முதலில் கால நீட்டிப்பு வேண்டும். காலநீட்டிப்பைப் பெற நமது நாடாளு மன்ற உறுப்பினர்கள் நாளைக்கே முன்னெடுப்புச் செய்யவேண்டும். வரைவுத்திட்டம் அமுலுக்கு வரும்போது தடுத்து நிறுத்திவிடலாம் என நினைப்பது தும்பைவிட்டு வாலைப்பிடிப்பதாக ஆகிவிடும்.