விநாயகருக்குத்தான் எத்தனை பெயர்கள்! ஒவ்வொரு பெயருக்குமான பொருள் இதுதான்!

முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே.


எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்புரிவார் விநாயகர். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். கணபதி: கணபதி எனும் சொல்லில் க என்பது ஞானத்தை குறிக்கிறது. ண என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. பதி என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது.

விநாயகர் : வி என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடக்கின்றன என்பதை அவருடைய மத்தள வயிறு கூறுகின்றது.

சதுர்த்தி : சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த திதியாகும். சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும்.

கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகரை வணங்க வினை யாவும் நெருங்காது. ஆகவே, சதுர்த்தி நாளானன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுதல் மிகவும் நல்லது.

 ஜாதகத்தில் திருமணத்தடை உள்ள பெண்கள் சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் தடை விலகி நல்ல வரன் தேடி வந்து அமையும்.

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒருவிதமான பலன்களை தரும் சக்தி இருக்கின்றது. ஆனால் கணபதியை வணங்கினால் அனைத்து சக்திகளை பெற முடியும். வினை தீர்ப்பவன் விநாயகன். விநாயகரை வணங்கி நன்மைகளை பெறுவோம்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.