வீடுகளில் இதை மட்டும் வளர்த்து பூஜை செய்தால் போதும்! சகல சவுபாக்யங்களும் கிடைக்கும்!

திருமாலின் திருமார்பை அலங்கரிக்கும் பேறு பெற்றது துளசி என்பதைநாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


இது சாதாரண துளசி, கருந்துளசி, கிருஷ்ண துளசி என மூன்று வகைப்படும். இவற்றில் கருந்துளசியை இல்லங்களில் பூஜைக்குப் பயன்படுத்துவதில்லை. ஆலயங்களில் பூஜைக்கு அர்ச்சனை தளிராக உபயோகப்படுகிறது. துளசி என்ற சொல்லிற்கு தன்னிகரில்லாதவள் என்று பொருள்.

மகாலட்சுமியின் அம்சமாக துளசிதேவி, கார்த்திகை மாதம் பௌர்ணமியில் அவதரித்தாள். லட்சுமி தேவியானவள், தர்மத்வஜன்-மாதவி என்ற தம்பதியருக்கு மகளாகப் பிறந்து பிரம்மாவைக் குறித்து தவம் செய்து வரம் பெற்றாள். அவளே துளசிச் செடியாக மாறி விஷ்ணுவுக்குப் பிரியவளாக விஷ்ணுப்பிரியை என்ற திருநாமத்தில் விளங்குகிறாள். எனவே மகாலட்சுமியின் அம்சமான துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார். மேலும் மற்ற தேவர்களும் வாசம் செய்கிறார்கள்.

வீட்டில் சுமங்கலிகள் மாடத்தில் துளசியை வைத்து தெய்வமாக வழிபடுவர். இதற்கென்று தனி வழிபாட்டு முறை உண்டு. துளசி பூஜை பெண்களுக்கு சுமங்கலித் தன்மையையும், அனைத்துவித சௌபாக்கியங்களையும் வழங்குவதுடன் எந்தவித தீய சக்திகளையும் நம் வீட்டில் அண்டவிடாமல் காக்கக்கூடியது. துளசியின் வேரில் தேவதைகள் வாசம் செய்கிறார்கள். மூன்று உலகங்களிலும் பூஜைக்கு ஏற்ற இலைகளில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

சொர்க்கம், பூலோகம், பசுக்கள் நிறைந்துள்ள இடங்கள், புண்ணிய நதிக்கரைகள், கிருஷ்ணரின் பிருந்தாவனம், நல்லூர் வசிக்கும் இடங்களில் துளசி வாசம் செய்கிறாள். துளசி செடியின் கீழ் தேங்கியிருக்கும் நீரில் எல்லா புண்ணிய தீர்த்தங்களும் இருப்பதாக ஐதீகம்.துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால் ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த அளவிற்கு ஆனந்தம் அடைவேன்’ என்று மகாவிஷ்ணுவே குறிப்பிட்டுள்ளார்.

நாம் அசுத்தமாக இருக்கும் போதும், உடலில் எண்ணெய் தேய்த்திருக்கும் போதும், நடுப்பகல், இரவு, சந்தியா காலத்திலும் பௌர்ணமி, அமாவாசை, துவாதசி, மாதப்பிறப்பு, வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளிலும் துளசியை பறிக்கக் கூடாது. துளசி இடப்பட்ட நீரில் நீராடினால் புண்ணிய நதிகளில் நீராடிய பலனுண்டு. அந்திம காலத்தில் துளசித் தீர்த்தம் உட்கொள்பவர்கள் பிறவி நோய் நீங்கி விஷ்ணுலோகம் அடைவார்கள் என்பது வைணவர்களின் நம்பிக்கை.