கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி ஆகியவை உடல் நலனுக்கு கேடு விளைவிக்குமா?

இறைவனை ஜோதி வடிவில் தரிசிக்க வேண்டும் என்பதற்காக ஏற்பட்டதே கற்பூர ஹாரத்தி எனப்படும் நிகழ்வு.


பச்சை கற்பூரம் வைத்து அதனை ஏற்றி ஆரத்தி காண்பிக்கவேண்டும். பச்சைக் கற்பூரத்தினை ஏற்றும் போது உடலுக்கு கெடுதல் உண்டாகாது. மாறாக அதிலிருந்து வெளிப்படும் புகையானது காற்றில் உள்ள மாசு மற்றும் கிருமிகளை அழிக்கும் சக்தி படைத்தது. பச்சைக் கற்பூரத்தின் விலை அதிகம் என்பதால் அதனை அதிகளவில் உபயோகப் படுத்த இயலவில்லை. தற்போது விற்பனையில் உள்ள கற்பூரத்தில் மெழுகு முதலான பொருட்கள் கலக்கப்படுகின்றன. அதிலிருந்து வெளிப்படும் புகை விஷத்தன்மை கொண்டதாக உள்ளது. அதனால் பலருக்கு இது ஒத்துக்கொள்வதில்லை.  இதன் காரணமாகத்தான் பல ஆலயங்களில் கற்பூர ஆரத்தியை தடை செய்து நெய்தீபம் மட்டுமே காண்பிக்கிறார்கள்.

அடுத்தது சாம்பிராணி. குங்கிலியம் முதலிய பொருட்களை கொண்டு சாம்பிராணி என்பது தயாரிக்கப்பட்டது. இத்தகைய சாம்பிராணியின் புகை உடம்பிற்கு நல்லது.  இந்த அசல் சாம்பிராணியின் புகையைத் தான் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு தலைக்கும் உடம்புக்கும் போடுவார்கள்.  கலப்படம் என்று வரும்போது சாம்பிராணிப் புகையும் உடம்பிற்குத் தீங்கு விளைவிக்கிறது.  காற்றில் உள்ள மாசுக்கள் அகன்று பொதுமக்கள் பலரும் கூடிகின்ற ஆலய வளாகம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தூப, தீப, ஆரத்தி உபச்சாரங்கள் இறைவனுக்கு செய்யப்படுகின்றன.

இல்லங்களிலும் நாம் தூப, தீப, ஆரத்தி ஏற்றி வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். ஆனால் அப்படி செய்யும் போது சுத்தமான் கற்பூரம், சாம்பிராணி முதலியவற்றை உபயோகிக்கவும். விளக்கு ஏற்றும் போதும் சுத்தமான பசு நெய்யை உபயோகிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்வதற்கு பொருளாதார நிலை இடம் தரவில்லையெனில் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடலாம்.  அதனை விடுத்து விளக்கேற்றுவதற்கு என்று தனியாக கலப்படம் செய்து விற்கப்படுகின்ற நெய்யினை உபயோகித்தால் அதுவும் நல்லதல்ல.