நவராத்திரி விரதம் எப்படி இருக்க வேண்டும்? அதன் பலன் என்ன தெரியுமா?

மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.


நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக்காலம். நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். 

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூஜை செய்ய வேண்டும். வீடுகள் அல்லது ஆலயங்களில் கொலு வைக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் அமாவாசையில் ஒருவேளை உணவு உண்டு பிரதமை முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூஜை முடிந்தபின் பால், பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது. 

நவராத்திரி கொலுவில் கும்பம் வைப்பது மிகவும் முக்கியமானது. நவராத்திரியில் குமாரி பூஜை மிகவும் பிரதானமானவை. வீட்டில் கொலு வைப்பவர்கள் 2 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை அழைத்து அவர்களை அம்மனாகப் பாவித்து, அவர்களுக்கு தேவையான பொட்டு, வளையல், உணவு, இனிப்பு பலகாரம், ஆடை கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். விரதமிருப்பவர்கள் ஒன்பதாம் நாளான நவமி அன்று முழுமையாக விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்பதால் குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள், நாம் பாராயணம் செய்யும் புத்தகங்களை வைத்து வழிபட வேண்டும். 

அடுத்த நாள் விஜயதசமியன்று சுவையான பலகாரங்கள் செய்து அம்பாளுக்குப் படைத்து நிவேதனம் செய்து, பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்து பிள்ளைகளுக்கு படிக்க கொடுக்கலாம். அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள அனைவரும் அம்பாளை வழிபட வேண்டும். 

இவ்வாறு 10 நாட்களும் சிரத்தையுடன் அம்பாளுக்கு விரதம் இருந்து விஜயதசமி அன்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இவ்விரதம் இருப்பதால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம். இவ்வாறு முறையாக விரதமிருந்தால், வாழ்வில் நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். 

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். 

நவராத்திரி நாட்களில் வீட்டில் கோலமிடுவதற்கு அரிசி மாவைப் பயன்படுத்தி கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். 

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். 

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சிறந்த வழிபாடாகும். 

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவி புரிகின்றன. 

திருமணம் ஆகாதவர்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும். 

நவராத்திரியின் ஒன்பது நாட்களில் வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.