ஒரு ப்ளூ சேலையும் பின்னே ராகுலுடன் ஒரே மேடையும்! உலக அளவில் டிரெண்டான ஜோதி விஜயகுமார்!

தற்போதைய சூழலில் கேரள மக்களால் யார் இந்த ப்ளூ சேலை பெண்மணி என்று கூகுளில் அதிகம் தேடப்படுபவர் இந்த ஜோதி விஜயகுமார் தான்.


அண்மைக்காலமாக ராகுல் காந்தியின் மொழிபெயர்ப்பு மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் பேச்சை தமிழில் மொழிபெயர்ப்பு செய்த தங்கபாலு சேலத்தில் மொழிபெயர்ப்பு செய்த டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் தடுமாறியது ராகுலுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் ராகுலின் பேச்சை மொழிபெயர்த்த குரியன் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் தனது மொழிபெயர்ப்பாளரை உடனடியாக மாற்றினார் ராகுல் காந்தி. இந்த முறை ராகுல் காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டவர் ஜோதி விஜயகுமார் எனும் பெண்மணி. நீல நிற சேலை அணிந்து பத்மநாபபுரம் மற்றும் திருவனந்தபுரத்தில் ராகுல் காந்தியின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் அச்சு அசலாக மொழிபெயர்த்த அசத்தினார் ஜோதி விஜயகுமார்.

அதிலும் தேசிய பிரச்சினைகளை ராகுல் காந்தி ஒவ்வொன்றாக குறிப்பிட அதனை கேரளாவில் எப்படி சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்பதை துல்லியமாக அறிந்து உடனுக்குடன் கூறி பாராட்டுகளை அள்ளினார் ஜோதி விஜயகுமார். இந்தப் பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி பேசியதை விட அதனை மொழிபெயர்ப்பு செய்த ஜோதி விஜயகுமாரை தான் கேரள மக்கள் அதிகம் விரும்பி ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து ஜோதி விஜயகுமார் யார் என்று அவர்கள் தேட ஆரம்பித்தனர்.

அவர் வேறு யாரும் அல்ல மூத்த காங்கிரஸ் தலைவர் விஜய குமார் என்பவரின் ஒரே மகள்தான் இந்த ஜோதி. இவர் கேரள சிவில் சர்வீஸ் அகாடமியில் சமூகவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஜோதி விஜயகுமார் கடந்த காலங்களில் சோனியா காந்திக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.