எல்லாரும் 3 வேளையும் பசியாறணும்..! ரூ.25 லட்சம் நிலத்தை விற்று முஸ்லீம் சகோதரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..! என்ன தெரியுமா?

கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் பசியாற உணவு அளிப்பதற்காக தங்களுடைய சொந்த நிலத்தை விற்பனை செய்து பாஷா சகோதரர்கள் இருவரும் கர்நாடக மாநில மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக விலகலை கடைப்பிடிப்பது ஒன்றுதான் இந்த நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வழி என்பதால் மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி வேலைகளுக்கு செல்ல முடியாமல் ஏழை மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். பசியால் வாடும் இந்த ஏழை மக்களுக்கு தங்களால் இயன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தை சேர்ந்த பாஷா சகோதரர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை ரூபாய்.25 லட்சத்திற்கு விற்பனை செய்து அதிலிருந்து கிடைத்த பணத்தை ஊரடங்கு உத்தரவால் அவதிப்பட்டு வரும் ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளையும் அவர்கள் பசியாற உணவு வழங்கி வருகின்றனர். தாஜம்முல் பாஷா மற்றும் முஷம்மில் பாஷா சகோதரர்கள் கோலார் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் உணவின்றி தவித்து வருவதை பார்த்து கண்கலங்கிய அவர்கள் உடனடியாக தங்களுக்கு சொந்தமான நிலத்தை நண்பரிடம் விற்பனை செய்து அதன் மூலம் பெற்று பணத்தை பயன்படுத்தி அங்கு இருப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு வேளையில், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலையில் அவர்களுக்கு தேவையான உணவை இந்த சகோதரர்கள் அவர்களது வீட்டு வாசலிலேயே கொண்டு சென்று அளிக்கின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான 10 கிலோ அரிசி , கோதுமை மாவு, பருப்பு , எண்ணெய் , தேயிலை என பல மளிகை பொருள்களையும் வழங்கி வருகின்றனர். இதற்காக அந்த மக்களின் வீட்டிற்கு அருகிலேயே டென்ட் அமைத்து அங்கு தேவையான மளிகைப் பொருட்களை குவித்து வைத்து இருக்கின்றனர். அங்கிருந்து ஒவ்வொருவரின் வீட்டிற்கும் தாங்களாகவே சென்று வழங்கி வருகின்றனர்.

இதனைப் பற்றி பாஷா சகோதரர்களிடம் கேட்டபொழுது, சிறுவயதில் இருந்தே தாய் தந்தையர்கள் இல்லாமல் பாட்டியிடம் தான் வளர்ந்தோம். அப்பொழுது நாங்கள் உணவுக்காக கஷ்டப்பட்ட சூழ்நிலையில் எங்களுக்கு இந்து, முஸ்லிம் , சீக்கியர்கள் என பல மதத்தினரை சேர்ந்தவர்கள் உணவு வழங்கினர். அன்றைய தினம் சாதி மத வேறுபாடின்றி எங்களுக்கு பலரும் உதவி செய்தனர். அதையே நாங்கள் இன்றைக்கு எங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு செய்து வருகிறோம். மேலும் பேசிய அவர்கள், எல்லா குடும்பங்களும் மூன்று வேளையும் வயிறார உணவு சாப்பிட வேண்டும் என்பதே எங்களுடைய தலையாய கொள்கையாக உள்ளது என்று கூறி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளனர்.

தினம் தோறும் சுமார் 2000 மக்களுக்கு அவர்கள் உணவுகளை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.