சென்னையில் சலூன் கடைக்காரருக்கு கொரோனா உறுதி..! முடி வெட்டிச் சென்ற 36 பேரின் நிலை..? பரபரக்கும் கோயம்பேடு!

சலூன் கடைக்காரர் ஒருருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் இன்றுவரை 1937 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 812 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளையும் மூடுவதற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சலூன் கடைக்காரர்கள் மிகுதியான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஹேர்கட் மற்றும் ஷேவிங் செய்து கொள்ள இயலாமல் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 2-வது ஊரடங்கு உத்தரவிலும், சலூன் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வருமானத்தை மீண்டும் ஈட்டுவதற்காக சலூன் கடை உரிமையாளர் ஒருவர் கோயம்பேட்டில் சலூன் கடையை தொடங்கினார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 நாட்களுக்கு முன்னர் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இவர் யாருக்கெல்லாம் முடி வெட்டினால் என்ற தகவல் தெரியவில்லை.

இவருடைய கடைக்கு கிட்டத்தட்ட 30பேருக்கு மேற்பட்டோர் முடிவெட்ட வந்து போனதாக தெரியவருகிறது. அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு அதிகாரிகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இவர் வீடு வீடாக சென்றும் முடிவெட்டி வந்துள்ளார்.

தினமும் 10 பேர் என்ற கணக்கில் கடந்த 14 நாட்களாக வீடு வீடாக சென்று முடிவெட்டி வந்துள்ளார். அவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள சமயத்தில் சலூன் கடையை திறந்து வைத்த குற்றத்திற்காக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், சலூன் கடைக்காரருக்கும் தோற்றிய ஏற்பட்டுள்ளதால் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.