குழந்தையின் இதயம் - இதயத்தில் ஓட்டையுடன் குழந்தைகள் - தாய்ப்பால் சந்தேகங்கள்

கரு முட்டையும் விந்தணுவும் இணைந்து சினைக்கருவாக உருவாகி, அது குழந்தையாக உருமாறுவது இயற்கையின் அதிசயம் என்றே சொல்லவேண்டும். குட்டியூண்டு உடலுக்குள் இதயம் எப்படி உருவாகிறது என்பதை பார்க்கலாம்.


·         கருவுற்ற முட்டையின் தலைப்பகுதி எனப்படும் செபாலிக் என்ட் என்ற பகுதிதான் இதயமாக மாறுகிறது.

·         தாயின் வயிற்றில் ஒரு தீக்குச்சி அளவில் சினைக்கரு இருக்கும்போதே இதயம் உருவாகத் தொடங்குகிறது.

·         இதயத்தின் உடல் பகுதி வளர்வதற்கு முன்பே, இதயத்தின் உள் அறைகளைப் பிரிக்கும் தடுப்புச் சுவர்கள் உருவாகிறது.

·         இதயம் முழுமையாக உருவாகும் முன்னரே இதயத்துடிப்பு தொடங்கிவிடுகிறது.

இதயம் மற்றும் இதயத்திற்குள் இருக்கும் ரத்தக் குழாய்களின் வளர்ச்சியானது, கருவின் மூன்றாவது வாரத்திலேயே தொடங்கிவிடுகிறது. அதனால்தான் ஆரம்ப நிலையிலே இதய பிரச்னைகளை மட்டும் கண்டறிந்துவிட முடிகிறது.

இதயத்தில் ஓட்டையுடன் குழந்தைகள்

இதயத்தில் ஓட்டையுடன் குழந்தைகள் பிறப்பது அரிதான நிகழ்வு என்றாலும், பாதிப்புள்ள எல்லோருக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. வளரும்போது தானாகவே சரியாகிவிடும் என்று மருத்துவர் சொல்வதாக கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உண்மையா என்று பார்க்கலாம்.

·         குரோமோசோம்களின் அமைப்பில் இயற்கையாகவே குறை இருந்தால், பிறக்கும்போதே குழந்தையின் இதயத்தில் ஓட்டை விழலாம்.

·         கர்ப்பிணியாக இருக்கும்போது தாய் வைரஸ் தாக்குதலுக்கு ஆளானால், அதனால் குழந்தையின் இதயம் பாதிக்கப்படலாம்.

·         பரம்பரைத் தன்மை காரணமாகவும் சிசுவுக்கு இதயக் குறைபாடு இருக்கலாம்.

·         மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மாத்திரை, மருந்து எடுத்துக்கொள்வதன் காரணமாகவும் இதய சிக்கல் உருவாகலாம்.

கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக எக்ஸ் ரே கதிர்வீச்சுக்கு ஆளாகும்போதும், குழந்தையின் இதயம் குறைபாடு அடையலாம். நாட்பட்ட நிலையில் தானாகவே இதயம் சரியாகும் சூழல் ஒருசில குழந்தைக்கு மட்டும் உண்டு என்பது உண்மையே. ஆனாலும் மருத்துவர் கண்காணிப்பு தொடர்ந்து இருத்தல் அவசியம்.

தாய்ப்பால் சந்தேகங்கள்

முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்து ஏகப்பட்ட சந்தேகம் வருவதுண்டு. தங்களுக்கு மட்டும் பால் சுரப்பு குறைவாக இருக்கிறது என்று பலரும் சந்தேகம் கொள்கிறார்கள்.

·         பொதுவாக குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 750 முதல் 1000 மில்லி லிட்டர் பால் சுரப்பு போதுமானதாகும்.

·         மார்பகத்தின் அளவுக்கும் பால் சுரப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதால் சிறிய மார்பகம் என்று வருத்தப்படத் தேவையில்லை.

·         குழந்தை பெற்ற முதல் சில நாட்களுக்கு மிகவும் குறைவாகவே பால் சுரப்பு இருக்கும், இதுவே குழந்தைக்குப் போதுமானது.

·         மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கை மற்றும் பால் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக கூடுதலாக பால் சுரப்பு இருக்கலாம்.

குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்கள் சத்தான காய்கறிகள், கீரைகள், பால், பழங்கள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவுக்கு இருக்கும்.