மாவட்டங்களைப் பிரிப்பதற்கு காரணம் பா.ஜ.க.வா? தமிழகத்தை இரண்டாக்கப் போறாங்க? கேள்வி எழுப்பும் விடுதலை சிறுத்தைகள்!

1956ம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது 13 மாவட்டங்களாக இருந்தன.


தற்போது 2019ம் ஆண்டு 35 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. இதன் எண்ணிக்கை 50ஐ எட்டும் அளவுக்கு கூட நிலைமை உயரலாம். இதற்குப் பின்னே தமிழகத்தை இரண்டாக்கும் எண்ணம் இருக்கிறது என்கிறார் விடுதலைசிறுத்தைகளின் வன்னியரசு. இதோ அவரது அறிக்கை.

பொதுவாக நிர்வாக வசதிக்காக பெரிய பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 1966ம் ஆண்டு சேலத்தை இரண்டு மாவட்டங்களாக பிரித்தார்கள்.. சேலம், தருமபுரி மாவட்டம் உருவானது. அதேபோல், 1985ம் ஆண்டு அன்றைய மதுரை, ராமநாதபுரம் 

மாவட்டங்களை பிரித்து விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் என்று உருவாக்கினார்கள். விரிந்த எல்லையை சுருக்கியதன் மூலம் மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கோ, தாசில்தார் அலுவலகத்துக்கோ சென்று தங்களது குறைகளை கோரிக்கைகளை எளிதில் சொல்ல முடிந்தது.

அப்படித்தான் தமிழ் நாட்டில் பல மாவட்டங்கள் உருவாகின. அவையெல்லாம் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுகள் என்றே நம்பலாம். ஆனால் இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி அவர்கள் பிரிக்கின்ற மாவட்ட பிரிவினைகளுக்கு பின்னால் பெரும் ‘அரசியல் சதி’ இருக்குமோ என்ற அய்யம் வலுவாக எழுகிறது.

ஏற்கனவே இருந்த வட ஆற்காடு மாவட்டம் கடந்த 1989ம் ஆண்டு வேலூர், திருவண்ணாமலை என்று இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. இப்போது வேலூர் மாவட்டம் மேலும் 3 மாவட்டங்களாகவும், காஞ்சிபுரம் 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

நாகை மாவட்டம் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறையும் தனி மாவட்டமாக அறிவிப்பதற்கும் வாய்ப்புள்ளன. மூன்று தொகுதிகள் ஒரு மாவட்டமாக பிரிக்கப்படுவது நிர்வாக வசதிக்காக மட்டுமா? எண்ணிக்கையின் வசதிக்காகவா? என்பதுதான் முக்கிய கேள்வி.

அது சரி இப்படி பிரிப்பதால் என்ன அரசியல் சதி நடந்து விடப்போகிறது? என்ற கேள்வி எழலாம். அதில் தான் பாஜகவின் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை திட்டமான ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்கிற அந்த செயல் திட்டதை இப்போது செயல்படுத்த ஆரம்பித்து விட்டது பாஜக. அதற்கு முன்னோட்டமாக,

மாநில கட்சிகளை பலவீனப்படுத்துவது அல்லது பயமுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது என்ற உத்தியை இந்தியா முழுக்க கையாண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக கையாண்ட விதம் இரண்டாம் ரகம் என்று எல்லோருக்குமே தெரியும். மற்ற மாநிலங்களில் தமது பிரித்தாளும் சூழ்ச்சியால் சூதுமதியால் மாநில கட்சிகளை பலவீப்படுத்தி வருகிறது ஆளும் பாஜக அரசு.

காஷ்மீரை மூன்றாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்ததன் பின்னணி கூட அதிகாரமற்ற  பகுதியாக மாற்றுவது தான். அப்படித்தான் இந்தியா முழுக்க அதிகாரமற்ற மாநிலங்களாக மாற்றுவது என்பது பாஜகவின் ‘சதி உத்தி’. மாநில கட்சிகளை எப்படி பலவீனப்படுத்தி தேசிய கட்சியான பாஜகவை வளர்க்க முயற்சிக்கிறார்களோ அதைப்போலவே, மாநிலங்களின் உரிமைகளை பலவீனப்படுத்தி தேசிய மயமாக்குதலை நடத்த முயற்சிக்கிறது பாஜக.

அதற்கான உத்திகளை நிகழ்த்த இப்போது தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலமாக காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டது பாஜக. மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதை காரணம் காட்டி தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பதுதான் பாஜக ‘சதி உத்தி’.

ஏற்கனவே, தமிழ்நாட்டை வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று பிரிக்க வேண்டும் என்று சாதியவாதிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அப்படி பிரிக்கப்பட்டால் அது பாஜக முன் வைத்துள்ள ஒரே நாடு கோரிக்கைக்குத்தான் வலு சேர்க்கும்.

இந்தியாவிலேயே, சமூகநீதி பேசுகிற மாநிலமாகவும், கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்துகிற மாநிலமாகவும் மாநில சுயாட்சி கோரிக்கையை தீவிரமாக பேசுகிற மாநிலமாகவும் தமிழ்நாடு தான் உள்ளது. தேசிய இனங்களின் உரிமை குறித்தும் தனித்தமிழ்நாடு கோரிக்கை குறித்தும் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவு கருத்தியல் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதை காரணம் காட்டி இரண்டு மாநிலங்களாக தமிழ்நாட்டை பிரிக்க வாய்ப்பு இருக்குமோ என்கிற வலுவான அய்யம் எழுகிறது. இதன் மூலம் தேசிய இனங்களின் உணர்வை வலிமையை சிதைக்க முடியும் என்பது ஒரு உத்தி என்று கூறியிருக்கிறார் வன்னியரசு.