தங்கள் பகுதியில் பெண் பிள்ளைகள் இருப்பதால் அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு பெண் பிள்ளைகள் உள்ளார்கள்! அதிமுக - பாஜகவினர் வாக்கு கேட்டு வர வேண்டாம்! அதிர வைத்த போஸ்டர்!

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க வீதி வீதியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் வெள்ளியங்காடு பட்டுக்கோட்டையார் நகர் என பல்வேறு பகுதிகளில் இன்று திடீரென போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டிருந்தன.
அந்த போஸ்டர்களில் இந்த வீதிகளில் பெண் பிள்ளைகள் இருப்பதால் பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் வாக்கு கேட்டு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்த போது பொள்ளாச்சி விவகாரத்தை தொடர்ந்து தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. இதேபோல் வடமாநிலங்களில் சிறுமிகளைக் கூட பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போஸ்டர்களை அடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த போஸ்டர்கள் திமுகவினர் செய்த சதி என்று அதிமுக மற்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்த போஸ்டர்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.