மோடியும் எடப்பாடியும் சேர்ந்தாச்சு! விஜயகாந்துக்கும் 5 சீட் ரெடி!

மோடியும் எடப்பாடியும் ஒருவழியாக மாசி பெளர்ணமியில் சேர்ந்துவிட்டார்கள். இன்று இரவே விஜயகாந்துக்கு 5 சீட் ஒதுக்கப்படுகிறதாம்.


மாசி பெளர்ணமியில் அ.தி.மு.க. கூட்டணி முடிவு செய்யப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டு வந்தது. அந்த வகையில் இன்று நல்ல நாள் என்பதால் காலையில் முதலில் ராமதாஸ் கூட்டணி முடிவு செய்யப்பட்டு 7 + 1 என்று கொடுக்கப்பட்டது. அமித் ஷா வரவில்லை என்பதால் பா.ஜ.க. கூட்டணி முடிவுக்கு வருமா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால், பியூஷ் கோயல் மட்டுமே போதும் என்று பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துவிட்டதாம். அதனால் இன்று பியூஷ் கோயல் வந்ததும் நேராக அடையாறு கிரெளன் பிளாசா ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு எடப்பாடி, பன்னீருடன் பா.ஜ.க. தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்படி பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு விட்டது.

இனிமேல் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் போன்றவர்களுக்கும் அ.தி.மு.க.வில் இருந்தே சீட் கொடுக்கப்பட இருக்கிறதாம். அதேபோல் இன்றே விஜயகாந்த் கட்சி கூட்டணியும் முடிவுக்கு வர இருக்கிறதாம். பா.ம.க. போலவே 7 சீட் வேண்டும் என்று பிரேமலதா அடம் பிடித்தார். இப்போது பா.ஜ.க. போன்று 5 சீட் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணி விஜயகாந்த்தை சமாதானப்படுத்தி வருகிறார். 5 சீட்டுக்கு ஒப்புக்கொண்டால் இன்றைய தினமே அந்தக் கூட்டணியும் முடிவு செய்யப்படுமாம். கூடுதல் சீட் கேட்டு அடம் பிடித்தால் காத்திருக்கத் தயாராக இருக்கிறார்களாம்.

ஆக, இதுவரை எடுத்துள்ள முடிவின் படி பா.ஜ.க. 5, விஜயகாந்த் 5, பா.ம.க. 7 மற்றும் உதிரிகள் 3 போன்றவற்றை விட்டுக் கொடுத்து 20 தொகுதிகளில் அ.தி.மு.க. நிற்கிறது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில்  ஜெயிப்பதுதான் அ.தி.மு.க.வுக்கு முக்கியம் என்பதால், இது மாபெரும் வெற்றி என்று கொக்கரிக்கிறார்கள்.

பார்க்கலாம்... பார்க்கலாம்.