பா.ஜ.க. தனித்து நின்றாலே 60 சட்டமன்றத் தொகுதிகளை வென்றுவிடும்! முருகனின் பேராசை அ.தி.மு.க. கூட்டணியை உடைக்குமா..?

தனித்து நின்றாலே 60 சட்டமன்றத் தொகுதிகளை பா.ஜ.க. வென்றுவிடும் என்று பேசியிருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன். இவரது பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது.


கடந்த சில வாரங்களாகவே எக்குத்தப்பாக பேசுவதை பா.ஜக. தலைவர்கள் கடைபிடித்து வருகின்றனர். பா.ஜ.க தலைமையில்தான் கூட்டணி என்று வி.பி.துரைசாமி கிளப்பிவிட்டதை, அடக்கிவைத்தார் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் எப்போதும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி செயல்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 60 இடங்களில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் 60 இடங்களில் நாங்கள் தனித்து நிற்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. அந்த இடங்களில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பும் இருக்குது. மேலும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய சேர்மன், மாவட்ட சேர்மன்னு பல இடங்களை பாஜக வெற்றிபெற்றிருக்கோம். எனவே சட்டமன்றத் தேர்தல்ல நாங்கள் முக்கியப் பங்கு வகிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம்தான் அ.தி.மு.க.வை சீண்டிப் பார்த்துள்ளது. கூட்டணியிலேயே சப்பாணி கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வுக்கு 10 சீட்டு ஒதுக்குவதே அதிகம். இந்த நிலையில் 60 சீட் என்பது பேராசையாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம், ‘அ.தி.மு.க அமைச்சர்கள் கூட்டணியை உடைக்கும் வகையில் பேசக்கூடாது’ என்று கூறியதும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. இப்படி ஆளாளுக்கு ஒரு வகையில் பேசுவதைப் பார்த்தால், கூட்டணியில் இருந்து பா.ஜ.க. விரட்டப்படும் நாள் நெருங்கிவருவதாகவே தெரிகிறது.