ஓட்டுனரே இல்லாமல் சாலையில் ஓடிய ஆட்டோ..! சென்னையை பீதிக்கு உள்ளாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி!

ஆட்டோ ஒட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் நெஞ்சுவலியால் மரணமடைந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று கொரட்டூரிலிருந்து மதுரவாயல் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆவின் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தடுமாறிய அவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து சாலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

ஆட்டோ சற்று தூரம் சென்று சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி நின்றுள்ளது. பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரகாஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த சாலையில் நடமாட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் விபத்து ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.