ரஜினி சரிப்பட்டு வரமாட்டார்! பா.ஜ.க மேலிடத்திற்கு தகவல் அனுப்பிய ஆடிட்டர்!

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் ரஜினியை நம்பி வியூகம் வகுக்க வேண்டாம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜ.க மேலிடத்திற்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.


தமிழக பா.ஜ.கவின் கொள்கை வகுப்பாளர்களில் மிக முக்கியமானவர் ஆடிட்டர் குருமூர்த்தி. தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.கவின் தேர்தல் ரீதியிலான நிலைப்பாடுகளில் குருமூர்த்தியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க – தே.மு.தி.க – பா.ம.க., - ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக்கப்பட்டதில் குருமூர்த்தியின் பங்களிப்பு இருந்தது.

   இதனை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர தீவிரமாக முயன்றார் ஆடிட்டர் குருமூர்த்தி. ஆனால் அதற்கு பலன் கிட்டவில்லை. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவு, கலைஞர் உடல்நிலை போன்ற காரணங்களை பயன்படுத்தி ரஜினியை அரசியலுக்கு தர தரவென இழுத்து வந்தார் குருமூர்த்தி. ஆனாலும் ரஜினி இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாகவே இருந்து வருகிறார்.

   சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ரஜினியும் அரசியல் கனவில் உள்ளார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியை மையமாக வைத்து குருமூர்த்தி வியூகம் வகுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினி அந்த வியூகத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை ரஜினியை எதிர்பார்த்திருப்பது தேவையற்றது என்று டெல்லிக்கு சேதி அனுப்பியுள்ளார்

   அத்துடன் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பதை தவிர பா.ஜ.கவுக்கு வேறு வழியில்லை என்றும் குருமூர்த்தி தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினியை விட்டுவிட்டு அ.தி.மு.கவை நெருக்க பா.ஜ.க தலைவர்கள் தயாராகிவிட்டதகாவும் கூறப்படுகிறது.