நின்ற கோலத்தில் அத்தி வரதர்! அலை அலையாக வரும் பக்தர்கள்! திக்குமுக்காடும் காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


கடந்த 31 நாட்களில் ஏறத்தாழ 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளனர். நேற்று மாலை 5 மணியுடன் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் அத்தி வரதரை தரிசிப்பதற்கு உண்டான கால அவகாசம் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று ஆகஸ்ட் 1ம் தேதி காலை சரியாக 5:25 மணிக்கு நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சியளிப்பார்.

அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று அவரை தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் சயன கோலத்தில் காட்சி அளித்து வந்த அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டவர்கள் மீண்டும் இன்று முதல் நின்ற திருக்கோலத்தில் காண வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரையிலான மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து வரதராஜ பெருமாள் கோவிலில் அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவம், கழிவறை வசதி உள்ளிட்டவை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை கோயில் நடைமுறையை பின்பற்றி, பக்தர்கள் இந்த கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு பகுதி பகுதியாக பிரித்து அத்தி வரதர் தரிசனத்திற்கு அனுப்பப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது .

மேலும் பக்தர்கள் தங்கியிருக்கும் கூடாரங்களை சுற்றி கழிவறைகள், குடிநீர் வசதி, 24 மணி நேர அன்னதான வசதி செய்யப்பட்டுள்ளது எனவும், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பிற்கும் காவலர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.