அத்தி வரதர் தரிசனம் – இப்ப மிஸ் பண்ணிட்டா 2059 வரை காத்திருக்கணும்!

காஞ்சிபுரம்: அத்தி வரதரின் தரிசனம் காண பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டிருக்கின்றனர்.


ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கிய தரிசனம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 48 நாட்களூக்கு இருக்கும். அத்திவரதர் 30 நாட்கள் சயனக்கோலத்திலும் 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பார். அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் வரை தரிசனம் செய்துள்ளனர்.

40-ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 28ம் தேதி அதிகாலை அத்திவரதர் திருக்குளத்திலிருந்து வெளியே எடுக்கும் பணி 12.30க்கு தொடங்கப்பட்டது. அதிகாலை 2.30 மணியளவில் அத்தி வரதர் திருக்குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார்.

காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தி வரதரின் தரிசனத்திற்கான நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவசியம் ஆதார்கார்டை கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்தி வரதரை வணங்குவதால் மோட்சம் பெறலாம் என்பதால், வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிக்க வேண்டும் என பக்தர்கள் அலை மோதுகின்றனர்.

அத்தி வரதரை தரிசிக்க 10 லட்சம் கிட்டத்தட்ட பக்தர்கள் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனம் செய்ய ஒரு பொது வழியும், ஒரு சிறப்பு தரிசன வழியும் அமைக்கப்பட்டுள்ளன.

தரிசனம் செய்ய இந்து அறநிலையத்துறை இணையதளம் ஆன் லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ அத்தி வரதர் வைபவத்திற்கான சஹஸ்ரநாம அர்ச்சனை டிக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 500 எண்ணிக்கை மட்டுமே வெளியிடப்படும். அதில் காலை 11.00 மணி தரிசனத்திற்கு 250 டிக்கெட்டுகளும், மாலை 3.00 மணி தரிசனத்திற்கு 250 டிக்கெட்டுகளும் வெளியிடப்படும்.

அத்திவரதர் பெருவிழாவையொட்டி 3-வது நா:ளான இன்று பச்சைப்பட்டு உடுத்தி மல்லிகைப்பூ மாலையுடன் ஆதி அத்திவரதர் காட்சியளிக்கிறார்.

இரண்டாவது நாளான நேற்று ஏகாந்த சேவை நடைபெற்றது. அத்திவரதர் நீல வண்ண அரக்கு பட்டு ஆடையில் பக்தர்களுக்கு தெய்வாம்சக் காட்சியுடன் பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.  அந்தக் காட்சியை காண பக்தர்கள் காஞ்சிபுரத்தில் கூட்டம் கூட்டமாகத் திரண்டனர்.

இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரைத் தரிசனம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

48 நாட்களுக்கு பிறகு விடையார்த்தி பூஜைகள் செய்யப்பட்டு அத்தி வரதர் மீண்டும் கோயில் குளத்தில் இறக்கப்படுவார். இதன் பிறகு 2059 மற்றும் 2099 ஆம் ஆண்டுகளில் மட்டுமே இந்த நூற்றாண்டில் காஞ்சி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.