ஆசிய கண்டத்திலேயே சூர்யகாந்தக்கல்லில் செய்யப்பட்ட மிகப் பெரிய பிள்ளையார் எங்குள்ளது தெரியுமா?

கோவை புலியங்குளத்தில் உள்ள பிள்ளையாருக்கு ஒரு சிறப்பு உண்டு.


ஆசிய கண்டத்தில் மிகப் பெரிய பிள்ளையார் சிலை அது தான். உயரம் 19 அடி, அகலம் 11 1/2 அடி. ஒரே கல்லில் செய்யப்பட்டது. இந்தப் புலியங்குளம் பிள்ளையாருக்கு தேவேந்திரப் பிள்ளையார் என்று பெயர். கருங்கல்லில் 3 வகை உண்டு. ஒன்று சூர்ய காந்தக் கல். இந்தக்கல் சூடாக இருக்கும். இது சிவன், அம்மன், காளி, துர்க்கை, வீரபத்திரர் சிலை  எனச் செய்யப் பயன்படும். சந்திரகாந்தக்கல் குளிர்ச்சியாக இருக்கும்.  இது பெருமாள், பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, புத்தர் சிலை செய்ய பயன்படும். சூடும் குளிர்ச்சியும் இல்லாதது அலிக்கல். இது சுவாமி சிலை செய்ய பயன்படாது. கல்லைத் தட்டிப் பார்த்தால் நல்ல ஓசை எழ வேண்டும். அந்த கல்லில் தான் சிலை செய்வார்கள். கோவை புலியங்குளப் பிள்ளையார் சூரியகாந்தக் கல்லில் கை தேர்ந்த பத்துச் சிற்பிகளைக் கொண்டு சுமார் 190 டன் எடையுடன் உருவாக்கப்பட்டது.

இது வலம்புரி விநாயகர். துதிக்கை வலமாக இருக்கும். இந்தப் பிள்ளையார் முக்கண்ணன் பிள்ளையார். நெற்றிக்கண் உள்ளது.  தலையில் மணிமகுடம் உள்ளது. கிழக்கு பார்த்த நிலை. தாழ் செவியன் தந்தி முகன் என்பதற்கு இணங்க தாழ்ந்த காதுகள், நான்கு கரங்கள் வலப்புற மேற் கையில் அங்குசம், கீழ்க்கையில் எழுத்தாணி, இடப்புற மேல் கையில் பாசக்கயிறு, கீழ்க் கையில் மோதகம், துதிக்கையில் அமிர்த கலசம் ஆகியவை இந்தப் பிள்ளையாருக்கு உண்டு.

வயிற்றை சுற்றி பெரிய பாம்பு.  இதை நாக அணி என்பார்கள். இது குண்டலினி சக்தியின் அடையாளம். இதனாலேயே நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால், அவர்களது தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. மார்பில் முப்புரிநூல். வலக்காலை ஊன்றி இடக்காலை நீட்டி அமர்ந்த கோலத்தில் உள்ளார்.  தாமரை மலர் போன்ற பீடம். தாமரையில் ஆயிரம் இதழ்கள். இது லெட்சுமி கடாட்சத்தைக் குறிக்கிறது.  இதற்குமேல் ஆதார பீடம்.

பிள்ளையார் சிலைக்குப் பின்னே ஒரு ஏணி இருக்கிறது. அதில் ஏறிச் சென்றுதான் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

கோவை நகரின் மையத்தில் இக்கோயில் இருக்கிறது. தொழிலதிபர்கள் அடிக்கடி வருகிறார்கள். புதிதாக தொழில் தொடங்குபவர்கள், புதிய வாகனம் வாங்குபவர்கள் இங்கு வந்து பூஜை செய்கிறார்கள்.