உங்க வீட்ல பீரோ எந்த மூலையில் இருக்குது? இந்தப் பக்கம் வைச்சுப் பாருங்க, செல்வம் கொட்டும்!

பணம் சம்பாதிப்பதற்கு திறமை வேண்டுமென்றால் அதைவிட பணத்தை சேமித்து வைப்பதும் மிகப்பெரிய கலை என்று தான் சொ்லல வேண்டும்.


அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கடினமாக உழைத்து சம்பாதித்த பணம், பெட்டியில் அதிகநாள் தங்குவதில்லை. இன்னும் சிலருக்கு அதிகநேரம் கூட தங்குவதில்லை. எப்படியோ, எந்த விதத்திலோ பணம் ஐஸ்கட்டி போல கரைந்துவிடுகிறது. எதனால் இப்படி? இதற்கு தீர்வு இருக்கிறதா? 

வீட்டின் ஈசானி மூலைப்பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ வைத்திருந்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம். அதனால் இந்த ஈசான்யத்தில் பணம் வைத்தால் சம்பாதித்த பணத்தை ஆற்றில் போட்ட கதையாகிவிடும். 

அதுபோல, அக்கினி மூலையில் பீரோ அமைப்பதும் நல்லதல்ல. அக்கினி மூலை என்பது நெருப்புக்குரிய பகுதி. நெருப்பில் இட்ட பொருள் யாவும் ‘சுவாகா’ஆவதுபோல, பணம் எப்படி கரைந்தது என கணக்குப் பார்க்கமுடியாத அளவில் செலவுஏற்படும். முக்கியமாக மருத்துவச் செலவுகளுக்கு பணம் செலவாகும். 

திருக்கோயில்களில், கன்னி மூலையில் (தென்மேற்கு) வீற்றிருக்கும்விநாயகர், “கன்னி மூலை கணபதி” என்றே அழைக்கப்படுகிறார்.தடைகளை நீக்கி, நல்லவை வளர செய்யும் அவர் விரும்பும் பகுதியேகன்னி மூலை எனப்படும் தென்மேற்கு பகுதியாகும். 

அதனால், கன்னிமூலை என்று சொல்லக்கூடிய நிருதி மூலை அதாவது தென்மேற்கு பகுதி பீரோவில் பணம் வைத்தால் விபரீத செலவுகள்,தேவையற்ற செலவுகள் ஆகியவை குறையும். 

தென்மேற்கில் அமைந்த பீரோவை, கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவில் எந்த தோஷமும் அண்டாமல் இருக்க, மஞ்சள் துண்டை விநாயகராக பாவித்து வைக்க வேண்டும். ஸ்ரீமகாலஷ்மி படத்தை பீரோவின் உள்ளே ஒட்டி வைக்கலாம். இதனால் மங்கள காரியங்கள் செய்ய போதிய பணம், நகை சேரும். 

அதுபோல, தினமும் அன்றாட செலவுக்கு பணம் எடுப்பதாக இருந்தால், தென்மேற்கு பீரோவில் இருந்து பணம் எடுப்பதை விட, வாயுமூலை எனப்படும் வடமேற்கில் சிறிய அலமாரி அமைத்து, அதிலே கொஞ்சம் பணம் வைத்து தினசரி செலவுகள், அவசர செலவுகளுக்கு பணம் எடுப்பதே நல்லது. 

அந்த அலமாரி கிழக்கு நோக்கி அமைக்கலாம். இடம் இல்லாதபட்சத்தில் வடக்கு சுவற்றில் அலமாரி அமைத்து, தெற்கு நோக்கியும் வைக்கலாம். இதனால், அன்றாட செலவுக்குத் திண்டாட்டம் இல்லாத அளவில் பண வரவு சிறப்பாக இருக்கும்.