முருகனுக்கு மட்டும் இல்லீங்க, ஐயப்பனுக்கும் அறுபடை வீடு இருக்குது! தரிசிக்க வேண்டிய ஆறு தலங்கள்!

கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்பனுக்கு மாலைப் போடும் பக்தர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.


பார்க்கும் திசையெல்லாம் ஐயனே! கேட்கும் ஒலியெல்லாம் சரணமே! என்று இருக்கும். அவ்வாறெல்லாம் போற்றப்படும் ஐயப்பனின் அறுபடைவீடுகள் பற்றி பார்ப்போம்!!.. தர்ம சாஸ்தாவான ஐயப்பனின் அறுபடை வீடுகள் :

1. ஆரியங்காவு 2. அச்சன்கோவில் 3. குளத்துப்புழா 4. எரிமேலி 5. பந்தளம் 6. சபரிமலை

1. ஆரியங்காவு : நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய கோவில் இதுவாகும். மற்ற ஐயப்பன் கோவில்களில் ஐயப்பன் பிரம்மச்சாரியாகவே காட்சியளிப்பதுண்டு. ஆனால், ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் சவுராஷ்ட்ர குலதேவியான புஷ்கலா தேவியுடன் அரச கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

2. அச்சன்கோவில் : செங்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் ஐயப்பனையும் தரிசிக்கலாம்.

இவருக்கு இருபுறமும் பு+ர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல் காட்சித் தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை 'கல்யாண சாஸ்தா" என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

ஐயப்பன் போருக்கு பயன்படுத்திய வாள் இங்கு பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு மற்றொரு விஷேச சக்தியுண்டு. அதாவது விஷப்பூச்சிகள் தீண்டினால், ஐயப்பன் விக்ரகத்தின் மீது பூசப்பட்டுள்ள சந்தனத்தையும் மந்திரித்த தீர்த்தத்தையும் தருவார். அவை தான் விஷக்கடிக்கு மருந்தாகும். உடலில் இருந்து விஷம் முற்றிலும் இறங்கி உடல் பூரணமாக குணமடைந்துவிடுகிறது.

3. குளத்துப்புழா : செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இந்த ஊர். இங்கு ஐயப்பன் குழந்தை வடிவில் குடி கொண்டுள்ளதால் பால சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டுள்ளது.

4. எரிமேலி : கேரளாவில் உள்ள இத்தலத்தில் ஐயப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எரிமேலியும் கேரளாவிலேயே உள்ளது.

5. பந்தளம் : இந்த தலத்தில் தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு சுவாமி ஐயப்பனுக்குரிய திருஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கருதப்படும் பந்தள அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன.

6. சபரிமலை : தர்மசாஸ்தாவாக விளங்கும் ஐயப்பன் துறவறம் மேற்கொள்ள, வில்லெடுத்து அம்பெய்தினார். அந்த அம்பு வந்து விழுந்த இடமே சபரிமலையாகும். அந்த இடத்தில் தான் 18 படிகளுடன் கோவில் உருவாக்கப்பட்டு, கிழக்கு நோக்கி ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருகிலேயே மாளிகைப்புரத்து அம்மனுக்கும் தனிக் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, கேட்பவர்களுக்கு கேட்ட வரத்தை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார். சபரிமலைக்கு புனிதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பனின் அறுபடை வீடுகளான இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும், சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை ஆகும்.