அருண் ஜேட்லி மறைவு..! ஆழ்ந்த துயரத்தில் இந்தியா!

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.


கடந்து ஒரு வருடமாகவே உடல் பாதிப்பு ஏற்பட்டிருந்த அருண் ஜேட்லி ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூச்சத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அருண் ஜேட்லிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 66. 1952ம் ஆண்டு பஞ்சாப்பில் பிறந்த அருண் ஜேட்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்தவர்.

டெல்லி பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது ஏவிபிபி அமைப்பு மாணவர் தலைவராகவும் இருந்த அருண்ஜேட்லி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் அமைத்த மாணவர் குழுவின் அமைப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்திரா காந்தி அவசர நிலையை அமல்படுத்தியபோது 19 மாதங்கள் சிறையில் இருந்த அருண்ஜேட்லி விடுதலையான பின்னர் பாஜகவின் முந்தைய அமைப்பான ஜனசங்கத்தில் சேர்ந்தார்.

1980களில் பாஜக இளைஞரணி தலைவராகவும், 1991ல் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றார் அருண்ஜேட்லி. 199ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

2,000ம் ஆண்டு மத்திய சட்ட அமைச்சராகவும், கம்பெனி விவகாரத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டவர் அருண் ஜேட்லி. 2009ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார்.

2014ல் நடைபெற்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அருண் ஜேட்லி 2018ம் ஆண்டு உத்தரபிரேதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

கட்சியிலும் ஆட்சியிலும் திறம்பட முடிவு எடுத்த அருண்ஜேட்லி பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சனைகளை திறம்பட கையாண்டவர். ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்த பெருமை அருண்ஜேட்லி அவர்களையே சாரும்.

மேலும் வங்கியில் பான் மற்றும் ஆதார் எண்களை இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்ட அருண் ஜேட்லி. பட்ஜெட் தாக்கல் செய்தவதை பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றியவர்

தன்னுடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவி வேண்டாம் என மறுத்திருந்தார். அருண் ஜேட்லி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களும் மற்றக் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நிதித்துறை, சட்டம் என அனைத்து பணிகளிலும் சிறந்து விளங்கியவர் அருண் ஜேட்லி என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார். மிகுந்த மனவலிமையும், அறிவாற்றலும் பெற்றவர் அருண் ஜேட்லி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த அரசியல்வாதியாக, நிர்வாக திறமையுடன் இருந்தவர் அருண் ஜேட்லி என திமுகவின் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.