பெங்களூரில் வைரலான மூன் வாக் ஓவியம்..! சபாஷ்... சாலை சீரமைப்புபணி மும்முரம்!

"மூன்வாக்" வீடியோ வைரலானதை தொடர்ந்து சாலைகளை சீரமைக்கும் பணிகள் பெங்களூருவில் பரபரப்பாக நிகழ்ந்து வருகின்றன.


பெங்களூருவில் குண்டும் குழியுமான சாலைகள் உள்ளன. துங்கநகர் எனும் இடம் பெங்களூருவில் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். இங்கு உள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. என அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நஞ்சுந்தசாமி என்ற ஓவியர் வைரலான ஓவியத்தை  வரைந்திருந்தார்.

நிலவின் மேற்பரப்பு போன்ற 3டி ஓவியத்தை சாலையின் மேல் வரைந்திருந்தார். அதன்மீது விண்வெளி வீரர் ஒருவர் "மூன்வாக்" முறையில் நடந்து செல்வது போன்று அமைத்திருந்தார். இந்த புகைப்படத்தின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

பொதுமக்கள் ஓவியரின் கலைநயத்தை பாராட்டியதோடு அல்லாமல், சீர்குலைந்த சாலையை விரைவில் சரி செய்யும்படி அரசாங்கத்திற்கு கண்டன குரல்களையும் எழுப்பினர். இந்த வீடியோவானது கர்நாடகாவில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.

மாநகராட்சி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த வீடியோ கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அவர்கள் நடவடிக்கை எடுத்தனர். தற்போது துங்கநகரின் சாலைகள் பழுது பார்க்கப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. 

அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்ட நஞ்சுந்தசாமி நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.