காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய ஆர்டிகிள் 370 ரத்து! அப்படி என்றால் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்படும் தாக்கம்தான் தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ளது.


இந்திய விடுதலையின் போது தனித்தனி சமஸ்தானங்களாக இருந்த பகுதிகள் பாகிஸ்தான் அல்லது இந்தியாவுடன் இணைந்து கொள்ளும் வகையில் பிரிட்டிஸ் அரசாங்கம் ஏற்பாடு செய்தது. அதன்படி பல்வேறு சுதேச அரசுகள் விரும்பி இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் காஷ்மீர் போன்ற ஒரு சில பகுதிகள் இந்தியாவுடன் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் பெரும்பாலும் இந்தியாவுடனும் இணையாமல் பாகிஸ்தானுடனும் இணையாமல் தனி நாடாக இருக்க விரும்பினர்.

ஆனால் பிரிவிணைக்கு பிறகு இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரண்டில் ஒரு நாட்டுடன் இணையும் நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது காஷ்மீரை ஆட்சி செய்து வந்த மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் இணைய விரும்பினார். ஆனால் காஷ்மீரில் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக இருந்தனர். அவர்கள் இந்தியா என்பது இந்து நாடாகிவிடும் என்கிற கவலை கொண்டனர். அப்போது ஹரி சிங் இந்திய ஆட்சியாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தாலும் கூட அது தனி நாடுபோல அதாவது பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் செயல்படும் ஒரு மாகாணமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ராணுவம், வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை மட்டுமே மத்திய அரசு காஷ்மீரில் கட்டுப்படுத்த முடியும். மற்றபடி காஷ்மீர் தொடர்புடைய சட்டங்கள் காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபையில் தான் மேற்கொள்ள முடியும்.

இது போன்ற சிறப்பு சலுகைகளை வழங்குவதற்காகவே இந்திய அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் 1954ம் ஆண்டு ஒப்புதல் கொடுத்தார். அப்போது முதல் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும் அம்மாநிலத்தில் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் நிலம் மற்றும் அசையா சொத்துகளை வாங்க முடியாது.

இதே போல் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சென்று குடியேறினாலும் அம்மாநில குடிமக்கள் ஆக முடியாது. தொடர்ச்சியாக காஷ்மீரில் பத்து ஆண்டுகள் வசிப்பவர்களுக்கு மட்டும் தான் காஷ்மீர் குடியுரிமை கொடுக்க இயலும். அப்படி பத்தாண்டுகள் ஒருவர் காஷ்மீரில் வசித்துள்ளார் என்பதை தீர்மானிப்பதும் காஷ்மீர் அரசு தான். மேலும் காஷ்மீர் குடிமக்கள் மட்டுமே காஷ்மீர் மாநிலத்தில் அரசு வேலை உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும்.

இதே போல் அரசியல் அமைப்பின் 370வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநில பெண்கள் வேறு ஒரு மாநில இளைஞரை திருமணம் செய்தால் தங்களுடைய சொத்துகளுக்கு உரிமை கோர முடியாது.  வேறு இளைஞரை திருமணம் செய்தால் காஷ்மீரில் உள்ள அப்பெண்ணின் சொத்துகளை அரசு எதிரி சொத்தாக்கி கையகப்படுத்திக் கொள்ளும். அதே சமயம் காஷ்மீர் மாநில ஆண்கள் பிற மாநில பெண்களை திருமணம் செய்து கொள்ள 370வது பிரிவு அனுமதிக்கிறது.

இதே போல் இடஒதுக்கீடு என்று எடுத்துக் கொண்டால் நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்கள் எதுவும் காஷ்மீரில் செல்லாது. இதே போல் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காது. இப்படி மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் சலுகைகள் என எதுவாக இருந்தாலும் காஷ்மீர் சட்டப்பேரவையின் ஒப்புதல் அவசியம்.

இப்படி இந்தியாவிற்குள் இருந்தாலும் கூட மத்திய அரசின் சட்டங்கள் அங்கு செல்லுபடியாகாமல் போவதற்கு காரணம் 1954ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்பிரிவு 370 தான் காரணம். இப்போது அந்த சட்டப்பிரிவை மோடி – அமித் ஷா கூட்டணி ரத்து செய்துவிட்டது.

இதனால் இனி காஷ்மீர் மாநிலமும் இந்தியாவின் பிற மாநிலம் போல் இருக்கும். அங்கு இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் சொத்துகள் வாங்க முடியும். இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் காஷ்மீரில் அம்மாநில அரசுப் பணியில் இணைய முடியும். காஷ்மீர் பெண்கள் வேறு மாநில இளைஞர்களை திருமணம் செய்தாலும் சொத்தில் உரிமை கோர முடியும். இது தான் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் தாக்கம்.