திருமண வயதில் மகனை வைத்துக் கொண்டு 2வது மனைவி கேட்குதா? கையும் களவுமாக சிக்கிய ராணுவ வீரர்!

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற இராணுவ அதிகாரி ஒருவரை சுவாமிமலையில் காவல்துறையினர் கைது செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலை என்னும் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகில் மதனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவருடைய வயது 42. இவர் ராணுவ தேர்வில் தேர்ச்சி பெற்று, குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவியின் பெயர் செல்லாராணி. இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இத்தம்பதியினருக்கு 21 வயதில் ஒரு மகனும் 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகன் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ எனும் மேற்படிப்பினை படித்து வருகிறார்.

கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. இதனால் இருவரும் மனம் நொந்தனர். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் யாருக்கும் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்.

அதன்படி மதுரையில் உள்ள மகாத்மா காந்தி நகரில் ஒருவரிடம் பெண் கேட்டுள்ளார். தான் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் தனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு பெண் வீட்டாரும் சம்மதித்தனர். திருமணத்தை சுவாமிமலை முருகன் கோவிலில் நடத்துவதாக தீர்மானித்தனர்.

இந்த செய்தியானது எந்த வழியிலோ, செல்லாராணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மனம் அதிர்ந்து செல்வராணி, மராட்டிய மாநிலத்தில் இருந்து சுவாமிமலை வந்தடைந்தார். அப்பகுதி காவல்துறையினரிடம் தகவலை தெரிவித்து அவர்களுடன் சுவாமிமலை சென்றார்.

அங்கு மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் இருந்த சுபாஷ் சந்திரபோஸை கைது செய்தனர். அப்போதுதான் புதுப்பெண்ணுக்கும் அவருடைய தந்தைக்கும் சுபாஷ் சந்திரபோஸ் ஏற்கனவே திருமணமானவர் என்ற செய்தி தெரியவந்துள்ளது.

கல்யாண கோலத்தில் இருந்த மணமகனை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவமானது சுவாமி மலை கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.