மனைவியிடம் பொய் சொல்பவரா நீங்கள்! இதோ கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது..

கணவன், மனைவி உறவுக்கு இடையே நிறைய பிரச்னைகள் வருவதற்குக் காரணம் பொய் சொல்வதுதான். கணவனாக இருக்கட்டும் மனைவியாக இருக்கட்டும் எந்த ஒரு காரணத்துக்காக பொய் சொன்னாலும், அது அவர்களின் பந்தத்தை அசைத்துப் பார்த்துவிடுகிறது.


பொய் சொல்வது பற்றிய குட்டிக் கதை இது.

மூன்று பெண்கள் கல்லூரிக்குப் போகும்போது கீழே ஒரு கண்ணாடி கிடந்தது. அதை ஆசையுடன் எடுத்துப் பார்த்தார்கள். உடனே அந்தக் கண்ணாடி பேசியது.

‘‘பெண்களே நீங்கள் உங்கள் அழகைப் பற்றி என்னிடம் உண்மையைச் சொன்னால் உங்களுக்குப் பரிசு தருவேன். பொய்யாக ஏதாவது பேசினால் விழுங்கிவிடுவேன்’’ என்று சொன்னது.

முதல் பெண் சிரித்தபடி, ‘இத்தனை சிறிய கண்ணாடி எப்படி என்னை விழுங்கும்என்றபடி கண்ணாடியிடம், ‘நான்தான் இந்த உலகத்திலேயே அழகான பெண்என்று சொன்னாள். அடுத்த கணம் அந்தக் கண்ணாடி அந்தப் பெண்ணை விழுங்கிவிட்டது.

உடனே பயந்துபோன அடுத்த பெண், ‘நான் இந்த ஊரிலேயே அழகான பெண்என்றாள். அடுத்த கணம் அவளையும் அந்தக் கண்ணாடி விழுங்கிவிட்டது.

உடனே மூன்றாவது பெண் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, ‘அவர்கள் இருவரையும் போல் நான் பொய் சொல்ல மாட்டேன்என்று சொல்லி முடிக்கும் முன்னரே அவளையும் விழுங்கிவிட்டது. அதாவது பொய் சொல்ல மாட்டேன் என்று அவள் சொன்னதே பொய். அதனால் அவளையும் விழுங்கிவிட்டது.

இதுபோன்ற கண்ணாடி இப்போது இருந்தால் இந்த உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் கண்ணாடியின் வயிற்றுக்குள்தான் இருப்பார்கள். ஏனென்றால் அத்தனை எளிதாக பொய் பேசுகிறார்கள். வீண் பெருமைக்காக பொய் பேசுபவர்கள் பெருகி விட்டார்கள். எந்த உறவுகளிடம் பொய் சொல்வதும் தவறு என்றாலும் புனிதமான கணவன், மனைவி உறவுக்குள் பொய் நுழைந்தால் அது குடும்பத்தையே குலைத்துவிடும். அதனால் ஒளிவுமறைவு இல்லாத உறவுதான் குடும்பத்தை நல்லதொரு பல்கலைக்கழகமாக வைத்திருக்கும். கணவன், மனைவி உறவு பொய்மை இல்லாமல் இருந்தால்தான், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.


பழைய காதல்பழைய தவறுகளை எல்லாம் கணவன்மனைவி இருவரும் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டுமா என்று பலரும் கேட்பது உண்டு. கண்டிப்பாக பழைய உண்மைகளை இருவரும் பரஸ்பரம் அறிந்துகொள்ளத்தான் வேண்டும். ஆனால், அதற்கென காலம், நேரம், சூழல் உணர்ந்து உண்மையைச் சொல்ல வேண்டும். அது ஒரு சிலருக்கு உடனே வாய்த்துவிடும். ஒரு சிலருக்கு ஒரு சில வருடங்கள் ஆகலாம். ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக திருமணத்துக்கு முன்னரே சொல்லி இருக்கவும் வேண்டும்.

சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணத்துக்குப் பிறகு தன் சொந்தங்களுக்கு பணம் தரவேண்டிய சூழல் இருக்கலாம். இதனை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் செய்வதுதான் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒரு சரியான சூழல் ஏற்படுத்தி, அந்தக் கடமையின் அவசியத்தைத் தன் துணைக்குப் புரியவைப்பதுதான் சாலச் சிறந்தது. பொய் இல்லாத வாழ்வே உயர்ந்தது, உண்மையானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.