ஜெயலலிதா கொடுத்த வாக்கை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..! அம்மா திருமண மண்டபத்தில் இத்தனை வசதிகளா..?

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கடந்த 17.9.2016 அன்று வெளியிட்ட அறிவிப்பில், ஏழை எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.


எனவே, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ‘அம்மா திருமண மண்டபங்கள்’ கட்டப்படும் என்று அறிவித்தார்கள்.   

அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், அயப்பாக்கத்தில், 0.64 ஏக்கர் பரப்பளவில், தூண் தளம் மற்றும் 3 தளங்களுடன், 12 கோடி22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். 

இப்புதிய திருமண மண்டபத்தில், தூண் தளத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும், முதல் தளத்தில் உணவு உண்ணும் அறையும், இரண்டாம் தளத்தில் சுமார் 630 நபர்கள் அமரக்கூடிய , மணமகள் மற்றும் மணமகன் அறைகளும், மூன்றாம் தளத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி படுக்கை அறையுடன் இணைந்த கழிவறை மற்றும் குளியலறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மின்தூக்கி வசதி, ஆழ்துளை கிணறு, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மின்மாற்றி ஜென்செட், மையகுளிர் சாதன வசதி, சூரியமின்சக்தி வசதி, கண்காணிப்பு கேமிராக்கள், வெளிப்புற மின் விளக்குகள், தீயணைப்பு வசதிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள், சுற்றுச்சுவர், மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை மாவட்டம், கொரட்டூரில் 0.98 ஏக்கர் பரப்பளவில் 13 கோடி90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் மற்றும் வேளச்சேரியில் 0.47 ஏக்கர் பரப்பளவில் 8 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தை திறந்துவைத்தார்.