இன்று ஏப்ரல் 2, 2020 ராமர் பிறந்த தினமான ஸ்ரீராம நவமி. ராம நாமம் உச்சரித்து, ராம நாமம் எழுதி பலன் பெறுங்கள்

சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர் ஸ்ரீராமர் அதைத் தான் ராம நவமி என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.


சில வருடங்களில் இந்த நன்னாள் பங்குனியில் மாதத்தில் அமைவதும் உண்டு. இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி ஸ்ரீ ராம நவமி கொண்டாடுகின்றனர். இந்த நாளில் யோகங்கள் நிறைந்த ராமரின் ராமரின் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து விரதம் இருந்து வணங்கினால் நோய்கள் நீங்கும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். அயோத்தி மன்னர் தசரதருக்கும் கவுசல்யாவிற்கும் சித்திரை மாதம் நவமி திதியில் மூத்த மகனாக அவதரித்தார் ஸ்ரீராமர்.

அஷ்டமியும் நவமியும் ஆகாத திதிகள் என்றும் அந்த திதிகள் வரும் நாட்களில் எந்த நல்ல விசயங்களும் செய்யக்கூடாது என்று ஒதுக்கி வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணராகவும், நவமி திதியில் பகவான் ராமராகவும் அவதரித்து அந்த திதிகளுக்கு நன்மை அளித்து மக்கள் கொண்டாடும்படி செய்துள்ளார் மகாவிஷ்ணு. பல சிறப்பு அம்சங்கள் பெற்ற ஸ்ரீராமரையும் அவர் ஜாதகத்தையும் இந்த ராமநவமி நாளில் பூஜிப்பது நமக்கு எல்லாவித அருளையும் பொருளையும் வாரி வழங்கும். நோய்கள் நீங்கும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான். ராமரின் தேஜஸை பற்றியும் அழகைப் பற்றியும் நம் வாய்மொழியால் சொல்லிவிட முடியாது அவ்வளவு அழகான தோற்றம் கொண்டவர் தான் ராமபிரான். இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ராமபிரான்.

ராமர் பூமியில் அவதரித்த நேரத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்ததால், ராமரின் ஜாதகத்தை எழுதி நம் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்தால், நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களால் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறையும் என்றும், வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்றும் நம் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோய்கள் கூட தீரும் என்பதும், ஐஸ்வரியத்தோடு வாழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அச்சத்தால் எல்லோரும் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் ஸ்ரீ ராமநவமியை வீட்டிலேயே கொண்டாடலாம். ராம நவமி நாளில் அதிகாலையில் குளித்து விரதமிருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர் மற்றும் மஹாலக்ஷ்மியின் அவதாரமான சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். மேலும், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வரும் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லை தீரும்.

குறிப்பாக குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ராமநவமி அன்று சுந்தர காண்டம், ராமாயணம் இந்த இரண்டையும் படிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. படிக்க முடியாதவர்கள் இந்த கதைகளை காதால் கேட்பதும் மிக நல்ல பலனை தரும். முடிந்தவர்கள் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்ற மந்திரத்தை 108, 1008 என்ற கணக்கில் எழுதலாம். பகல் பொழுதில் ராமரை நினைவுகூறும் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அதில் தவறு இல்லை.

ராமபிரானை ராமநவமி அன்று விரதம் இருந்து வழிபட்டால் நம் மனதில் எண்ணிய காரியங்கள் விரைவாக நிறைவேறும் என்றும், நமக்கு தோல்வியை கிடையாது என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.