மனைப்பிரிவு சம்பந்தமான விண்ணப்பங்களை, காலதாமதமின்றி விரைந்து அனுமதி வழங்க வேண்டும்! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு

இன்று சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும கூட்டரங்கில், நகர் ஊரமைப்பு துறையின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வு கூட்டத்தில், கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு சம்பந்தமான விண்ணப்பங்களை, காலதாமதமின்றி விரைந்து அனுமதி வழங்குவதற்கு உரிய நடைமுறையை செயல்படுத்துமாறும், பெறப்படும் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவற்றில் விடுபட்ட விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் தேவை ஏற்பட்டால் மட்டும் மின்னஞ்சல் மூலமாக மனுதாரருக்கு தெரிவித்து தகவல்களை பெற்றுக்கொண்டும், தேவைப்படின் மனுதாரருடன் நேரில் கலந்தாய்வு செய்வதற்கு ஒரு வாய்ப்பளித்து விடுபட்ட விவரங்களை விரைந்து பெற்று உரிய கால கெடுவிற்குள் தீர்வு செய்யப்படவேண்டுமென மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள். 

மேலும், நகர் ஊரமைப்பு துறையில் புதியதாக உருவாக்கப்பட்ட 15 மாவட்ட அலுவலக பணிகளை எவ்வித தொய்வுமின்றி துரிதமாக மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.