அமானுஷ்யம் நிறைந்த அர்த்தநாரீஸ்வரர் எப்படி உருவானார் தெரியுமா?

பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்குவது என்று உறுதியான கொள்கையைக் கடைப்பிடிப்பவர்.


அம்முனிவர் தன்னை வணங்கவில்லை என்பதால் கோபம் கொண்ட உமை முனிவரின் உடலில் இருக்கும் சக்தியை, ஆற்றலை நீக்கிவிட, பிருங்கியால் நேராக நிற்கக்கூட முடியவில்லை. வெறும் எழும்புக்கூடாகக் தோன்ற அவருக்கு மூன்றவது காலை அளித்து நிற்கும்படிச் செய்தார் சிவபெருமான். பிருங்கியை ஒடுக்க தான் செய்த முயற்சிகள் தோல்வியுற உமை சிவனை நினைத்து தவமிருந்து தன் வருத்தத்தையும் வேண்டுகோளையும் தெரிவிக்க, உமையின் வேண்டுகோளுக்கிணங்க தம் உடலில் பாதியை உமைக்கு அளித்து மங்கை பாங்கனார். ஆனால் அப்போதும் பிருங்கி வண்டு உருக்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபங்கை மட்டும் நடுவில் துளையிட்டுச் சுற்றி வந்தார். உமையின் விருப்பின்படி தன் உடலில் பாதி அளித்த கோலமே அர்த்தநாரீஸ்வரர் திருவடிவம்.

இந்து சமயம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை கொடுத்துப் போற்றுகின்றது. அதனால்தான் இறைவனை ‘மாதொருபாகன்’ என்றும் ‘அம்மை அப்பன்’ என்றும் வட மொழியில் ‘அர்த்தநாரீஸ்வரன்’ (அர்த்தம்-அரை, நாரி-பெண்) என்றும் சொல்கின்றோம். ஆண் பெண் வேறுபாடின்றி இரு பாலருக்கும் ஒத்த உரிமையும் மேன்மையினையும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வடிவம். மேலும் ஆணும் பெண்ணும் ஒருங்குடன் கூடி வாழ்தலே உயிரினங்கள் தோன்ற வாய்ப்பு என்ற தத்துவத்து தெரிவிக்கும் வடிவம். சிவசக்தி தம்பதியரிடையே ஒற்றுமையை ஓங்கச் செய்பவர்.

இத்திருவடிவம் வலப்பக்கம் சிவனின் சிறப்புக் கூறுகளான சடைமுடியும், பிறைச்சந்திரனும், செவியில் சர்ப்பக் குண்டலமும்/ மகரக் குழையும், நெற்றிக் கண்ணில் பாதியும், ஆண் மார்பும், திருநீறும், திருமேனியில் புலித்தோலாடையும், பாம்பு பூணூலும் கொண்டு வலக்காலை சிறிது வளைத்து நிற்கும் நிலையில் இருப்பார். இடப்பக்கம் உமை பெண்மைக்குரிய பொலிவினையும், தலையில் சுரண்ட மகுடமும், செவியில் வாலிகா எனப்படும் பெரிய குண்டலமும், நெற்றியில் திலகமும், கண்ணில் மைப்பூச்சும், கைகளில் வளையல்களும், பெண்மைப் பூரிப்பிற்கேற்ற கொங்கையும், கழுத்தில் மகளிர்க் கேற்ற அணிகலன்களும், காலில் சிலம்பும், மேனி கருமை அல்லது கிளிப்பச்சை வண்ணம் கொண்டு இருப்பர். வலக்கரத்தில் வரத முத்திரை. இடக்கரம் கிளி/ மலரை ஏந்திய வண்ணம் இருக்கும்.

இந்த அர்த்தநாரீஸ்வரர் தமிழ்நாட்டில் உள்ள திருச்செங்கோடு எனும் ஊரில் இருக்கும் சிவன் கோவிலில் மூலவராக விளங்குகிறார்.