சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அதிர்ஷ்டம் தந்த திருக்கோயில் இதுதான்!

மராட்டிய மன்னன் சிவாஜி ஸ்ரீ காளிகாம்பாளை வழிபட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விரும்பி வழிபடும் ஆலையங்களில் ஒன்றாக ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது.


இந்திரன், வருணன் உள்ளிட்ட தேர்வர்களும், பிருங்கி மகரிஷி, வியாசர், அகத்தியர், பராசரர், புலஸ்திரர், ஆங்கிரேசர் உள்ளிட்ட முனிவர்களும், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் உள்ளிட்ட நவகிரங்கள், ஆமைவடிவில் திருமால் கமடேஸ்வரராக அன்னை காளிகாம்பாளை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றது.  

குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்ற புராண செய்திகளும் உண்டு. மேலும், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி 1677-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் திகதி அன்று ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் "யாதுமாகி நின்றாய் காளி" என்று தான் எழுதிய பாடல் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை மனதில் வைத்து எழுதப்பட்டதாகும். 

இத்திருக்கோயில் கி.பி.1640ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் ஆரம்பத்தில் இருந்தது. ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரம்மஸ்ரீ முத்துமாரி ஆச்சாரி என்பவரால் தம்புசெட்டித் தெருவிற்கு இந்த கோயில் இடமாற்றம் செய்யப்பட்டு வழிபாடுச் செய்யப்பட்டு வருகிறது. 

புராண வரலாற்றில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீ காளிகாம்பாள், பழங்காலத்தில் மீனவர்களும் மற்றவர்களும் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் நெய்தல் நில காமாட்சி என்ற பெயரிலும் ஸ்ரீ காளிகாம்பாள் அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீ காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் என்பதை நினைவூட்டும் வகையில், மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ காளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது. 

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ காளிகாம்பாளின் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்ப மலரும் காட்சியளிக்கிறது. இடது கை வரத முத்திரையுடன் காணப்படுகிறது. வலது கால் தாமரையில் வைத்தபடி அன்னை காளிகாம்பாள் பகதர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அம்பாளின் கருவறையைச் சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீ முருகர், ஸ்ரீ வீரபஹாமங்கர் மற்றும் அவரது சீடர் சித்தையா, அன்னையின் பள்ளியறை, ஸ்ரீ கமடேஸ்வரர் சந்நிதி, ஸ்ரீதுர்கா, ஸ்ரீசண்டிகேஸ்வரர், பிரம்மா, சூரிய சந்திரர் சந்நிதிகள் அமைந்துள்ளன. 

திருமணமாகி குழந்தை இல்லாதோர், கருவறையில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாளுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்துவதாலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் விளக்கிஏற்றி வழிபாடு செய்வதால் குழந்தை வரம் அளிப்பார். இங்குள்ள ஆஞ்சநேயர் சனிக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறும். 

இந்த கோயிலில் சித்திரை பெளர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆடியில் வசந்த உற்சவம், வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் சேவை, ஆடி கிருத்திகை, ஆவணியில் விநாயகர் சதூர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் கமடேஸ்வரர் அண்ணாமலையாருக்கு அன்ன அபிஷேகம் உள்ளிட்டவை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. 

நடிகர் ரஜினிகாந்த் அவரின் மிகப்பிடித்த ராகவேந்திர திருக்கோயிலுக்கு விரும்பி செல்வதோடு, தனது முக்கிய முடிவுகள், படங்கள் தொடங்கும் முன் ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.