முதலமைச்சர் மகளை கடத்தப்போவதாக மிரட்டல்! உஷார் நிலையில் போலீசார்!

முதலமைச்சர் மகளை கடத்தப்போவதாக வந்த மிரட்டலை அடுத்து போலிசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மின்னஞ்சலுக்கு நேற்று இரவு மர்ம இமெயில் ஒன்று வந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த இமெயிலில் கெஜ்ரிவாலின் மகள் ஹர்சிதாவை கடத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஹர்சிதாவை கடத்தக்கூடாது என்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சில வாசகங்கள் அந்த இமெயிலில் இருப்பதாக கூறப்படுகிறது.

  ஆனால் கடத்தல்காரர்கள் கோரிக்கை குறித்த விவரத்தை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். இமெயில் மிரட்டல் குறித்து உடனடியாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற போலீசார் இமெயில் விவரங்களை பெற்று அந்த இமெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்கிற விவரத்தை சேகரித்து வருகின்றனர்.

  ஏற்கனவே பேஸ்புக்கில் கெஜ்ரிவால்  மகள் ஹர்சிதா குறித்து மோசமாக விமர்சனம் செய்ததாக ஒரு பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த பெண் இந்த கடத்தல் இமெயிலின் பின்னணியில் உள்ளாரா என்று விசாரரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் தீவிரவாதிகள் ஏதேனும் இதன் பின்னணியில் உள்ளனரா என்றும் விசாரிக்கப்படுகிறது.

  கெஜ்ரிவாலுக்கு ஒரு மகள், ஒரு மகன் உண்டு. இவர்களில் மகள் ஹர்சிதா டெல்லி ஐ.ஐ.டியில் படித்து வருகிறார். தற்போது அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லி ஐ.ஐ.டி வளாகமும் காவல்துறை கண்காணிப்பில் உள்ளது.