தேவைப்பட்டால் குடியுரிமை திருத்த மசோதாவை திருத்தம் செய்ய தயார்..!அமித்ஷா அதிரடி..!

அவசியம் ஏற்பட்டால் குடியுரிமை திருத்த மசோதாவை மற்றொரு முறை திருத்தம் செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாக கூறியிருக்கிறார்.


கடந்த வாரம் மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் வெற்றிகரமாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது . இதனையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. போராட்டக்காரர்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக பலரும் பல விதங்களில் யோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 கட்டங்களாக நடைபெற்று வரும் தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக அமித்ஷா பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் ஜார்கண்ட் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட அமைச்சர் அவசியம் ஏற்பட்டால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மீண்டும் தாங்கள் திருத்தம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அதன் மூலம் வடகிழக்கு மாநில மக்களின் கவலையை போக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷாவின் இந்த வாக்கு தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்கான பரப்புரையா? அல்லது மக்களின் துயரை போக்குவதற்கான உறுதியளிப்பா? என பொறுத்திருந்து பார்ப்போம். இருப்பினும் வட கிழக்கு மாநிலங்களான அசாம் திரிபுரா மணிப்பூர் ஆகிய இடங்களில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வன்முறை போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நம் நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.