குடியுரிமை திருத்த மசோதாவை கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்தார் அமித்ஷா..!

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதாவை வெற்றிகரமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தாக்கல் செய்தார்.


இன்றைய தினம் குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதை அடுத்து வடமாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நிலவிவருகிறது.

பாகிஸ்தான் , வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இந்த குடியுரிமை திருத்த மசோதா இன்று நண்பகல் 12 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்

இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாணவர் சங்கத்தினர் மற்றும் போராட்டக்காரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சிவசாகர் சார்ந்த பகுதியில் நிர்வாண போராட்டங்கள் செய்த மக்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல் மணிப்பூர் தலைநகரிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும் இந்த குடியுரிமை திருத்த மசோதா இந்திய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் பெரிய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமில்லாமல் நாடாளுமன்றத்திலும் மற்ற கட்சிகள் இந்த குடியுரிமை திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அவர்களின் எதிர்ப்பை மீறி உள்துறை அமைச்சர் அமித்ஷா வெற்றிகரமாக குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த குடியுரிமை திருத்த மசோதா இன்றைய தினம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவின் படி, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

 அவர்கள் நம் நாட்டில் குடியேறிய ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த உடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனவும் அந்த திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.