தேனியிலிருந்து கோவைக்கு வேகமாக வந்து, உயிருக்கு போராடிய 2 மாதங்களே ஆன குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
நெகிழ வைத்த ஆம்புலன்ஸ் டிரைவர்! தேனி To கோவை 240 கிமீ! குழந்தையை காப்பாற்ற 3 மணி நேரத்தில் கடந்து அசத்தல்!
கோவை மாவட்டத்தில் மலுமிச்சம்பட்டி என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ஆனந்தசாமி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு பிறந்து 2 மாதங்களேயான குழந்தை ஒன்றுள்ளது.
ஆர்த்தி தன்னுடைய சொந்த ஊரான தேனிக்கு பெற்றோரை பார்ப்பதற்கு சென்றார். அப்போது குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கு வலிப்பும் வந்துள்ளது. பதறியடித்துக் கொண்டு குழந்தையை தேனி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக கூறினர். எவ்வளவு முயன்றும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் குழந்தையை கோவை மருத்துவமனைக்கு இன்குபேட்டர் வசதியில் அழைத்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
சின்னமன்னூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தார். மேலும், ஜாபர் அலி என்பவர் ஆம்புலன்ஸை ஓட்டினார். இவர்களுக்கு உதவியாக அஸ்வின்சந்த் என்ற மருத்துவரும் ஆம்புலன்சில் உடன் வந்தார்.
பிற்பகல் 3:10 மணியளவில் தேனியிலிருந்து புறப்பட்டனர். சதீஷ்குமார் ஆம்புலன்சில் வரும் தகவலை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் தெரிவித்தார். சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர்.
மேலும் சுற்றுலா வாகனங்களுக்கும் இந்த தகவலானது சென்றடைந்தது. இதனால் நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் சற்றும் ஏற்படவில்லை. தகவலறிந்த காவல்துறையினரும் ஒலி பெருக்கிகளின் மூலம் சாலையில் வாகன நெரிசல் ஏற்படாமல் கவனித்தனர்.
240 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 3 மணி நேரத்தில் கடந்தனர். சாதாரண வேகத்தில் சென்றிருந்தால் 5 மணிநேரம் ஆகியிருக்கும். கோவை அரசு மருத்துவமனையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததில் குழந்தையின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.
மேலும் தற்போது குழந்தையும் நலமுடன் இருப்பதாக பெற்றோர் கூறியுள்ளனர். சதீஷ்குமார், ஜாபர் அலி இதர ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், காவல்துறையினர், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், ஆகியோரை பொதுமக்கள் பாராட்டு வருகின்றனர்.